கேமராவில் மாயாஜாலங்கள் காட்டிய ஒளிப்பதிவாளர் கர்ணன்!.. நிறைவேறாமலே போன கடைசி ஆசை..

Published on: November 29, 2023
Photographer Karnan
---Advertisement---

ஒளிப்பதிவாளருக்கு என்றே ரசிகர் கூட்டம் இருந்தது என்றால் அது கர்ணனுக்குத் தான். அதுவும் அந்தக் காலத்திலேயே தொழில்நுட்பம் இல்லாத நாள்களிலேயே கேமராவில் பல மாயாஜாலங்களை நிகழ்த்தினார். அவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் ஒளிப்பதிவுக்குப் பெயர் பெற்றவர் கர்ணன். இவரை ஒளிப்பதிவில் மேதை என்றே சொல்வார்கள். இவருடைய ஒளிப்பதிவை கர்ணஜாலங்கள் என்று பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

கோடம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருக்குக் கடற்படையில் சேர வேண்டும் என்பது தான் பெரும் கனவாக இருந்தது. ஆனால் அப்பா சம்மதிக்கவில்லையாம். எங்கோ தொலைதூரத்தில் எல்லாம் உன்னை விட்டு விட்டு என்னால் இருக்க முடியாது என்றார். நீ என் கூட வா என்று அவரை அழைத்துப் போய் ரேவதி ஸ்டூடியோவில் சேர்த்து விட்டார். அப்போது ஒளிப்பதிவாளருக்கு உதவியாளர் தேவைப்பட்டது. அதனால் அங்கு அந்த வேலையைச் செய்தார்.

60களில் வெளியான பல படங்களில் தன் தனித்துவமான ஒளி ஜாலத்தைக் காட்டினார் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம். அவரிடமும் கர்ணன் உதவியாளராக இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கமால் கோஷ், நிமாய் கோஷ், பொம்மன் டி.ரானி, பி.எஸ்.ரங்கா என பல கேமரா ஜாம்பவான்களிடமும் உதவியாளராகப் பணியாற்றினார். அதனால் இவருக்கு என்று ஒரு ஸ்டைல் உருவானது.

Karnan, MGR

அப்போது அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திற்கு டபிள்யு.ஆர்.சுப்பாராவ் ஒளிப்பதிவாளராக இருந்தார். அவருடனும் கர்ணன் இணைந்து உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா, கப்பலோட்டிய தமிழன், தங்கமலை ரகசியம் என பல சூப்பர்ஹிட்டான படங்களிலும் கர்ணன் பணியாற்றினார்.

1959ல் வெளியான பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் தான் கர்ணனின் முதல் படம். அடுத்து வந்த அம்பிகாபதி இவருக்கு ஸ்பெஷலானது. கே.ஆர்.விஜயா அறிமுகமான படம் கற்பகம். இந்தப் படத்திற்கும் கர்ணன் தான் ஒளிப்பதிவாளர். அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. சிவாஜியின் மணியோசை படம் கர்ணனின் ஒளிப்பதிவால் பேசப்பட்டது.

பெண்ணே நீ வாழ்க, காலம் வெல்லும், ஜக்கம்மா, கங்கா, எங்க பாட்டன் சொத்து, ஜம்பு ஆகிய படங்களில் கர்ணனின் புகழ் பரவியது. முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் முக்தா சீனிவாசன் கர்ணனின் கேமரா லாவகத்தைக் கண்டு வியந்துள்ளார். காட்சியை சொன்ன சில நிமிடங்களிலேயே தயாராகி விடுவாராம். பனிச்சறுக்கு சண்டை, அருவிக்கு அருகில் சண்டை, புழுதி மண் பறக்க சண்டை, குதிரைகள் றெக்கை இல்லாமல் பறக்கும் சண்டை, பைக்குகளில் சண்டை என பல மாயாஜாலங்களை ஒளிப்பதிவில் கொண்டு வந்தவர் கர்ணன்.

இவருக்கு எம்ஜிஆரை வைத்து கௌபாய் படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்தது. ஆனால் அது ஏனோ நிறைவேறாமலேயே போனது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.