உனக்கு எதுக்கு சினிமா?!.. கலாய்த்த சோ.. வைராக்கியத்தோடு சாதித்து காட்டிய ஜெய்சங்கர்…

Published on: December 4, 2023
JS Soa
---Advertisement---

நடிகர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் பராசக்தி படத்துல பேசுற நீண்ட வசனம் தான் நடிகர்களுக்கு ஒரு நுழைவுத்தேர்வு போல இருந்தது. அந்த விதத்தில் ஜெய்சங்கரும் அவரோட வசனத்தை மனப்பாடமாக பேசி வாய்ப்பை வாங்கியிருக்கிறார். ஆரம்ப நாட்களில் ஜெய்சங்கர் சந்தித்த ஏமாற்றமும், முதல் பட வாய்ப்பும் எப்படி கிடைச்சதுன்னு பார்ப்போம்…

பராசக்தி படத்தை ஜெய்சங்கர் பலமுறை பார்த்தும் சிவாஜிகணேசன் பேசிய வசனத்தை மனப்பாடமா வச்சிருந்தாராம்… ஜெய்சங்கர் தந்தை சுப்பிரமணியம் பரமக்குடியில் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்தார். பள்ளியில் இருந்து வந்ததும் ஜெய்சங்கர் தந்தையின் மாஜிஸ்திரேட் கோர்ட் சென்று விடுவார். அங்கு போய் கோர்ட் அறை கூண்டில் ஏறி நின்று கொண்டு பராசக்தி வசனத்தைப் பேசுவாராம்…

அந்தப்படத்தைப் பார்த்ததில் இருந்து சிவாஜி என்னோட மானசீக குரு என்றாராம். அதே நேரம் கமலோட வீட்டுக்கும் போயிருக்கிறார். அங்கு கமல் சிறுவனாக இருந்தபோது அவரைப் பற்றி பலரும் பெருமையாகப் பேசியதைப் பார்த்து பொறாமைப்பட்டாராம். பின்னாள்களில் கமலோடு இணைந்தே படத்தில் நடித்து விட்டார்.

Iravum Pagalum
Iravum Pagalum

கல்லூயில் படித்த நாட்களில் ஜெய்சங்கருக்கு நாடகங்களில் நடிக்குறதுல மிகுந்த ஆர்வம். நடிகர் சோவும், ஜெய்சங்கரும் படிச்சது ஒரே கல்லூரி. அதனால சோ ஒருமுறை தன்னோட நாடகத்துல நடிக்கறதுக்கு ஜெய்சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தாரு. ஜெய்சங்கர் அந்த நாடகத்துல நடிச்ச கேரக்டரை வேறொரு நடிகர் நடித்துக் கொண்டு இருந்தாராம்.

அப்போ ஜெய்சங்கர் நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைச்சது. அப்போ ஏற்கனவே அந்தக் கேரக்டர்ல நடிச்ச நடிகர் சோ கிட்ட வந்து நீங்க நாடகம் முடிந்ததும் ஜெய்சங்கரோட நடிப்பே சரியில்லன்னு சொல்லுங்கன்னு சொன்னாரு. இதை மட்டும் நீங்க சொல்லலன்னா இன்னைலருந்து நாடகத்துல இருந்து விலகிக்கிடறேன்னு சோவை மிரட்டினாராம் அந்த நடிகர்.

நாடகம் முடிந்ததும் ஜெய்சங்கர் சோவிடம் வந்தார். என்ன சங்கர், ஒத்திகையே இல்லாம இந்த அளவுக்குப் பிரமாதமா நடிச்சிட்டீங்கன்னு சொன்னாரு. நீ இந்த அளவு நடிப்பேன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல. உனக்கு விருப்பம் இருந்தா நீ நடிச்ச பாத்திரத்தை தொடர்ந்து நடிக்கலாம் என்றார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்தார் சோ.

அப்படி நாடகங்களில் நடிக்கும்போது தான் ஜெய்சங்கருக்கு அவரோட மானசீக குருவான சிவாஜியோடவும் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்து பேரு மருதநாட்டு வீரன். ஆனா சூட்டிங் ஆரம்பிக்கும் போது அவருக்கு அழைப்பு வரலயாம். ஏன்னு கேட்டபோது சிவாஜி தான் அவருக்குப் பதிலா வேறொரு நடிகரை நடிக்க வச்சதா ஜெய்சங்கருக்குத் தகவல் வந்ததாம். இது மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்தது.

சில நாள்களில் டெல்லியில் ஒரு வேலையாகப் போக வேண்டியிருந்ததாம். அப்போது சோ அவரை வழியனுப்பி வைத்தார். இந்த சினிமா, டிராமாவ எல்லாம் விட்டுட்டு நல்ல வேலையைத் தேடிப் பாருன்னு அறிவுரை சொன்னார் சோ. அப்போ ‘நான் திரும்பி வருவேன். சினிமாவுல கதாநாயகனா நடிச்சே தீருவேன்னு சொல்லிவிட்டு டெல்லி சென்றார் ஜெய்சங்கர்.

சில ஆண்டுகளில் திரும்பி வந்ததும் ஜெய்சங்கருக்கு ஜோசப் தலியத்தின் இயக்கத்தில் இரவும் பகலும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.