இவர் சினிமாவில் காட்டப்படும் வழக்கமான அப்பா இல்லை. ஆனால் நம் வீட்டில் இருக்கும் அப்பா. அதுதானே உண்மை. அந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தவர் தான் நடிகர் இளவரசு. மதுரை மேலூரைச் சேர்ந்தவர். இவர் வெறும் நடிகர் மட்டும் அல்ல. ஒளிப்பதிவாளரும் கூட. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் தான் இவர் அறிமுகமானார்.
50 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். வேதம் புதிது, பொற்காலம், தவசி, வெற்றிக்கொடி கட்டு, பூவெல்லாம் உன் வாம், பாய்ஸ், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, களவாணி போன்ற படங்களில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, இனியவளே, நினைத்தேன் வந்தாய், மனம் விரும்புதே உன்னை, வீரநடை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.

நக்கல், நையாண்டி கலந்த பேச்சு. அதற்கேற்ற பாடிலாங்குவேஜ் இவரது தனி அடையாளங்கள். இந்த ஒரு தனித்துவத்தால் தான் இன்று வரை இவர் சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார். உதாரணமாக இவர் நடித்த ‘முத்துக்கு முத்தாக’ படத்தைப் பார்த்தால் தெரியும். என்ன ஒரு அருமையான நடிப்பு? அப்பான்னா இதுதான் அப்பா என்று சொல்லிவிடலாம். தனது நடிப்பாலேயே உணர்வுகளை வெகு நேர்த்தியாகக் கடத்தி விடும் ஆற்றல் உள்ளவர்.
அந்தப் படத்தில் சாப்பாட்டில் அரளி விதையை அரைத்து சரண்யா கொடுப்பார். அந்த சாப்பாட்டை எடுத்து அதில் இருந்து ஒரு உருண்டை உருட்டுவார். சாப்பிடுவார். அப்போதே அதன் ருசியைத் தெரிந்து கொள்கிறார் இளவரசு. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு குழம்பு ருசியா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஊத்தும்மா எனக் கேட்கும்போது நெஞ்சங்களை எல்லாம் நிறைத்து விடுகிறார்.
சரண்யாவை ஒரு பரிதாபத்தோடு பார்க்கிறார். இதுவரை வாழ்க்கைல உன்னைச் சந்தோஷமாகத் தானம்மா வச்சிருந்தேன் எனக் கேட்கும்போது கண்களில் நீர் வழிந்து விடுகிறது. குணச்சித்திர நடிப்பில் அசகாய சூரர் என்றே சொல்லலாம். அதாவது டயலாக் எல்லாம் அதிகமாக இருக்காது. ஆனால் இயல்பாகவே நடித்து அசர வைத்து விடுவதில் கில்லாடி.
