Cinema History
புல்லாங்குழல் கலைஞர் பாடகரான சுவாரசியம்… மனதை மயக்கிய அருண்மொழி!..
மனதை மயக்கும் திரை இசைப்பாடல்களுக்கு முதல் சொந்தக்காரர் இசை அமைப்பாளர்தான். அவர்தான் பாடலுக்கு டியூன் போட்டு மெட்டை உருவாக்குகிறார். அதுமட்டுமல்லாமல் பாடகர் பாடும் பாடலுக்கும் மெருகூட்டுகிறார். அதே நேரம் அந்த இசை அமைப்பாளர்களே பாடகராகும்போது அதன் நயம் மேலும் கூடுகிறது.
அப்படிப்பட்ட இசை அமைப்பாளர்களில் இளையராஜா, ஏஆர்.ரகுமான், தேவா என பலர் உண்டு. இருந்தாலும் அதிகம் அறியப்படாத ஆனால் அருமையான பாடலைப் பாடிய ஒருவர் உண்டு. அவர் தான் அருண்மொழி. இவருக்கு இந்த அழகான பெயரை சூட்டியவர் கவிஞர் வாலி.
அருண்மொழி இளையராஜாவிடம் புல்லாங்குழல் வாசிப்பவர். உயர்ந்த உள்ளம் படத்திற்காக வந்தாள் மகாலெட்சுமியே பாடலில் தான் அருண்மொழி முதன் முதலாக புல்லாங்குழல் வாசித்தார். இளையராஜாவிடம் இருந்து பல இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். ஒருமுறை ரெக்கார்டிங்கில் சக இசைக்கலைஞருக்கு பாடிக் காட்டி இசையின் நுட்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தாராம்.
இதைக் கவனித்த இளையராஜாவுக்கு ஒரு யோசனை தோன்றியதாம். இவ்வளவு அருமையாக பாடுகிறாரே… இவரையே பாடகராக்கினால் என்ன? அப்படி உருவான பாடல் தான் சூரசம்ஹாரம் படத்தில் வரும் ‘நான் என்பது நீயல்லவோ, தேவ தேவி’… அருமையாகப் பாடியிருப்பார் அருண்மொழி. காதல் மெலடிப் பாடல்களில் இது தவிர்க்க முடியாதது.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அருண்மொழி இசையில் காலடி எடுத்து வைக்கும்போது புல்லாங்குழல் வாசித்தது ஒரு கமல் படத்திற்குதான். பாடகராக காலடி எடுத்து வைக்கும் போது பாடிய முதல் பாடலும் கமல் பாடல்தான். என்ன ஒரு ஒற்றுமை என்று நம்மையே வியக்க வைக்கிறார் அருண்மொழி.
இவர் இன்னும் பல அழகான பாடல்களை தமிழ்த்திரை உலகுக்குக் கொடுத்துள்ளார். நட்சிகர் பார்த்திபனுக்கு அதிகமான பாடலை அருண்மொழி பாடியிருக்கிறார். அவருக்கு இவரின் குரல் மிகவும் பொறுத்தமாக இருக்கும். வெள்ளிக் கொலுசு மணி, உன்னைக் காணாமல் நான் ஏது, வராது வந்த நாயகன், காதல் நிலாவே பூவே, மல்லிக மொட்டு மனசத் தொட்டு என இந்தப் பாடல்களைக் கேட்டாலே போதும். நெஞ்சம் லேசாகி பறக்கத் தொடங்கி விடும்.
நெப்போலியன் செல்வராஜ் என்பது இவரது இயற்பெயர். திருவனந்தபுரம் சொந்த ஊர். தமிழ்த்திரை உலகில் இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், கார்த்திக் ராஜா, சிற்பி, யுவன் சங்கர் ராஜா என பிரபல இசை அமைப்பாளர்களுடைய இசையில் பாடியுள்ளார்.