1950 முதல் 1960 வரை பல திரைப்படங்களில் நடித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். கருணாநிதியை போலவே திராவிட கொள்கைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அறிஞர் அண்ணாவை தனது உயிருக்கும் மேலாக நேசித்தவர். திரைப்படங்களில் தூய தமிழை கணீர் குரலில் அழகாக உச்சரித்து வசனம் பேசிய முக்கியமான நடிகர் இவர்.
திரைப்படங்களில் இவர் பேசும் வசனங்கள் அனல் பறக்கும். உலக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சினிமா நடிகர் சட்டசபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றால் அது இவர்தான். 1962ம் வருடம் திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு பின்னர்தான் எம்.ஜி.ஆர் போன்ற சில நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர்.
இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்
மதுரை மாவட்டம் சேடப்பட்டியில் பிறந்தவர் இவர். சிறு வயதிலேயே பாய்ஸ் கிளப் நாடக கம்பெனியில் நடிக்க துவங்கிய எஸ்.எஸ்.ஆர் அதன்பின் பல நாடகங்களிலும் நடித்தார். சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தில் அவரின் சகோதரராக நடித்திருப்பார். பெரும்பாலான நடிகர்கள் புராண படங்களில் நடித்த அந்த காலகட்டத்திலேயே திராவிட கொள்கைகளை உறுதியாக கடைபிடித்த எஸ்.எஸ்.ஆர் நெற்றியில் விபூதி கூட பூசி நடிக்க மாட்டார்.

அதனால்தான் அவருக்கு ‘லட்சிய நடிகர்’ என்கிற பட்டமும் கிடைத்தது. 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆலயமணி போன்ற சில படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரை தனது சொந்த அண்ணனாகவே பாவித்தவர் இவர். அறிஞர் அண்ணா மரணமடைந்த போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றார்.
இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..
இதுபற்றி ஒருமுறை பேசிய எஸ்.எஸ்.ஆர் ‘அண்ணா இறந்துவிட்டார் என்கிற துயரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலைவரே போய்விட்டார். இனிமேல் நாம் ஏன் உயிர் வாழ வேண்டும் என முடிவுவெடுத்தேன். அதிக அளவில் மது அருந்தி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இதை கேள்விப்பட்டு தந்தை பெரியார் என்னை பார்க்க வந்தார்.
கோபமாக என்னை பார்த்த அவர் ‘என் வயது என்ன?.. உங்கள் வயது என்ன?.. நான் மருத்துவமனையில் இருக்க வேண்டும். நீங்கள் என்னை வந்து பார்க்க வேண்டும்’ என சொல்லிவிட்டு தான் வந்த வீல் சேரை வேகமாக தட்டி அங்கிருந்து போய்விட்டார். என்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது.
அதற்கு மேல் அந்த மருத்துவமனையில் என்னால் இருக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையின் சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு வந்துவிட்டேன். பெரியார் மட்டும் அப்படி என்னிடம் பேசாமல் இருந்திருந்தால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்’ என ஒருமுறை எஸ்.எஸ்.ஆர் கூறியிருந்தார். 2014ம் வருடம் தனது 86வது வயதில் எஸ்.எஸ்.ஆர் மரணமடைந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…
