தமிழ்த்திரை உலகில் ரஜினி, கமல் என இரு ஜாம்பவான்களின் குருநாதராக இருந்தவர் பாலசந்தர் தான். அப்படிப்பட்ட நிலையை அடைந்தபிறகு அவரது அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் பல பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் அவரை பேட்டி கண்டன.
அப்படி ஒரு சமயத்தில் நிருபர் ஒருவர் தர்மசங்கடமான கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பாலசந்தர் புத்திசாலித்தனமாக ஒரு பதில் சொன்னார். என்ன என்று பார்க்கலாமா…
ரஜினி, கமல் என இருவரிடமும் நீங்கள் கண்டு வியந்த பல விஷயங்கள் இருக்கும். ஆனால் அவர்களிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன என்று சொல்ல முடியுமா என்று ஒரு கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்டார் அந்த நிருபர்.
பாலசந்தர் இந்தக் கேள்விக்கு எல்லாம் டக்கென்று பதில் சொல்லி விட முடியாது. கொஞ்சம் புத்திசாலித்தனமாகத் தான் பதில் சொல்ல வேண்டும். படங்களிலேயே தொலைநோக்குப் பார்வையுடன் கதையைக் கொண்டு வரும் திறன் படைத்தவர் பாலசந்தர்.
அந்த வகையில் பார்த்தால், அவருக்கு இந்தக் கேள்வி எல்லாம் ஜூஜூபி தான். இருந்தாலும் அந்த நேரத்தில் பதில் யோசிக்காமல் சொல்ல வேண்டும் அல்லவா? அதுதானே சமயோசிதம். அவர் சொன்னது இதுதான்.

நான் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஜெய்சங்கர் பொம்பள ஷோக்கு பிடித்தவராக இருப்பார். அதுதான் சபலபுத்தி உள்ளவர். அவரைக் காதலிக்கும் லட்சுமி கூட ஒரு கட்டத்தில் அதை நம்ப ஆரம்பித்து விடுவார்.
ஒரு காட்சி வரும். வெள்ளைத்தாளைக் கொண்டு வந்து நாகேஷ் அதில் ஒரு புள்ளி வைப்பார். இது என்ன என லட்சுமியைப் பார்த்துக் கேட்பார். கரும்புள்ளி என்பார். ஏன் இவ்ளோ வெள்ளை இருக்கே… அது கண்ணுக்குத் தெரியலையான்னு கேட்பார். இதை எங்கேயோ படிச்சிருந்தேன். அதை இந்தப் படத்தில் பயன்படுத்தி விட்டேன்.
அப்படித்தான் உங்கள் கேள்விக்கும் பதில். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத் தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதைத் தான் நான் பார்க்கிறேன் என்றார்.
எவ்வளவு பக்குவமான பதில் என்று பாருங்கள். அங்கு தான் இயக்குனர் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.
