Cinema History
இதனாலதான் உன் படத்துக்கு மியூசிக் போடல!.. எடக்கு மடக்கு பார்த்திபனையே மடக்கிய இளையராஜா..
இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் பார்த்திபன். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பார்த்திபன் வேலை செய்திருக்கிறார். குருவிடம் பல விஷயங்களையும் கற்றுக்கொண்டார். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் புதிய பாதை.
எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாத ஒரு கெட்டவன் ஒரு பெண்ணால் நல்லவனாக திருந்து வாழ்கிறான். அப்போது அவன் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதுதான் கதை. சாதாரண கதை என்றாலும் அதற்கு தனது ஸ்டைலில் திரைக்கதை அமைத்து அவரே நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவையே திருமணமும் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: அத மட்டும் நான் எப்பவுமே செய்ய மாட்டேன்!.. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு கொடுத்த விஜய்!..
அதன்பின் பல படங்களையும் இயக்கி நடித்திருக்கிறார். புதுமையாகவும், வித்தியாசமாகவும் படம் எடுக்கிறேன் என சொல்லி நிறைய நஷ்டத்தை சந்தித்தவர் பார்த்திபன். இவர் இயக்கிய சுகமான சுமைகள், புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ்புல், குடைக்குள் மழை போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது.
உள்ளே வெளியே, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு வசூலை பெற்றுத்தந்தது. ஒரே ஷாட்டில் எடுக்கிறேன் என சொல்லி இரவின் நிழல் என்கிற படத்தையும் எடுத்தவர் இவர். ஒருபக்கம், நிறைய படங்களிலும் பார்த்திபன் நடித்திருக்கிறார்.
பொதுவாக 90களில் முதல் படம் இயக்கும் எல்லா இயக்குனர்களுக்கும் தங்களின் முதல் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். பார்த்திபனுக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால், அப்போது அவரின் குரு பாக்கியராஜ் இளையராஜா மீது இருந்த கோபத்தில் சொந்தமாக இசையமைக்க துவங்கிவிட்டார். இளையராஜாவை பார்த்திபன் பார்க்க சென்றபோது ‘நீயும் ஆர்மோனியத்த வச்சி மியூசிக் போட வேண்டியதுதான.. உன் படத்துக்கு நான் மியூசிக் போட மாட்டேன் போ ’ என கத்தி இருக்கிறார் இளையராஜா.
இதையும் படிங்க: உள்ளூர்ல வேணுனா அம்பானியா இருக்கலாம்! வெளியூர்ல.. ரஜினியை வம்புக்கிழுத்த பார்த்திபன்
அதன்பின் சந்திரபோஸை இசையமைக்க வைத்தார் பார்த்திபன். படமோ சூப்பர் ஹிட். இரண்டாவது படமாக ‘பொண்டாட்டி தேவை’ படத்தை எடுத்தார் பார்த்திபன். அப்போது பார்த்திபனை தன்னை வந்து சந்திக்க்கும் படி இளையராஜா சொல்ல அவரும் போய் பார்த்திருக்கிறார். ’நான் இல்லாம படம் எடுக்க மாட்டேன்னு சொன்னியே.. இப்ப நான் இல்லாமலும் படத்தை எடுத்து நீ ஹிட்டு கொடுத்திருக்கே.. இது உனக்கு புரியனும்னுதான் நான் மியூசிக் போடல’ என சொல்லி இருக்கிறார் இளையராஜா.
அதன்பின் பார்த்திபன் இயக்கி நடித்த பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, இவன் ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.