Cinema History
தமிழை ஏன்டா கொல்றீங்க!.. எம்.எஸ்.விஸ்வநாதன் கன்னத்தில் பளார் விட்ட பாடலாசிரியர்!..
1960,70களில் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இராமூர்த்தியோடு இணைந்து பல திரைப்படங்களும் அவர் இசையமைத்திருக்கிறார். காதல், தத்துவம், சோகம், கிளாசிக், வெஸ்டர்ன் என எம்.எஸ்.வி கொடுத்த இசையில் ரசிகர்கள் சொக்கிபோனார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலருக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் இவர். நூற்றுக்கணக்கான இனிமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். இளையராஜாவுக்கு பின் எம்.எஸ்.வி இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்துபோனது. ஆனால், இப்போதும் ஒரு படத்திற்கு இசையமைக்கும் முன் எம்.எஸ்.வி சாரின் பாடல்களை கேட்கிறேன் என ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானே சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வி மீது கோபப்பட்டு மரத்தடியில் போய் நின்ற இயக்குனர்!.. உருவானதோ ஒரு சூப்பர் பாட்டு!..
சினிமாவில் இசையமைக்கும் முன் திரையரங்கில் முறுக்கு, பிஸ்கெட் போன்ற பொருட்களை விற்றுகொண்டிருந்தார் எம்.எஸ்.வி. தியேட்டரில் படம் பார்க்கும்போது இசை அவரை பெரிதாக ஈர்த்தது. அதோடு, நடிக்கும் ஆசையும் வர சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, உடுமலை நாராயணகவியிடம் உதவியாளராக சேர்ந்தார்.
அதன்பின் அப்போது பிரபல இசையமைப்பாளர்களாக இருந்த சுப்பையா நாயுடு மற்றும் சி.ஆர். சுப்புராமன் ஆகியோரிடம் வேலைக்கு சேர்ந்தார். சுப்புராமன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். எனவே, அவர் இசையமைக்கவிருந்த படங்களுக்கு அவரின் உதவியாளராக இருந்த எம்.எஸ்.வி ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்தார்.
இதையும் படிங்க: அந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. எம்.எஸ்.வியிடம் கறாராக சொன்ன டி.எம்.எஸ்!… காரணம் இதுதான்!..
அப்படி அவர் இசையமைத்த படம்தான் தேவதாஸ். 1953ம் வருடம் வெளிவந்த இந்த படத்தில் இடம் பெற்ற ‘உலகே மாயம்.. வாழ்வே மாயம்’ என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த பாடலை எம்.எஸ்.வியின் ஆரம்பகால குருவான உடுமலை நாராயணகவி எழுதியிருந்தார். இந்த பாடலை அவரிடம் எம்.எஸ்.வி போட்டு காட்டியிருக்கிறார்.
பாட்டை கேட்டதும் ‘ஏன்டா இப்படி தமிழை கொல்றீங்க?’ எனக்கேட்டு எம்.எஸ்.வி-யின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார் நாராயணகவி. ஏனெனில் அந்த பாடலை தெலுங்கு பாடகர் கண்டசாலா பாடியிருந்தார். அவரின் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பதுதான் நாராயணகவியின் கோபமாக இருந்திருக்கிறது. அதன்பின்னர் தான் இசையமைக்கும் பாடல்களில் தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதில் எம்.எஸ்.வி கடைசிவரை உறுதியாக இருந்தார்.