Cinema History
கார்த்திக்,வடிவேலு நடித்த அந்த சூப்பர்ஹிட் படக்காட்சிகள் அப்பவே வந்திருக்கா!.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..
பிற மாநில மொழிப்படங்களின் கதை ரீமேக் ஆகி தமிழில் வந்து பல படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. அதே போல பாடல்களும் பழைய படங்களில் இருந்து ரீமிக்ஸ் ஆகி வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பழைய தமிழ்ப்படங்களின் காட்சியை அப்படியே காப்பி அடித்து எடுத்த படங்கள் நிறைய வந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
சபாஷ் மீனா படத்தில் சிவாஜி தான் ஹீரோ. பணக்காரனான இவர் வெட்டியாய் சுற்றுவதாக தன் நண்பரான சந்திரபாபுவிடம் அனுப்புவார் அவரது தந்தை. பையன் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதற்காக தந்தை சந்திரபாபுவின் வீட்டிற்குப் போவார்.
அப்போது சிவாஜியும், சந்திரபாபுவும் தந்தையை சமாளிக்கும் காட்சி அப்படியே கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்திலும் இருந்தது. இந்தப்படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.
அடுத்த வீட்டுப்பெண் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் தான் ஹீரோ. தனக்குப் பாடத் தெரியாததால் அவர் நண்பர் தங்கவேலு பாட டி.ஆர்.ராமச்சந்திரன் தானே பாடுவது போல் நடித்து கதாநாயகி அஞ்சலிதேவியைக் கவர திட்டம் போடுவார்.
இதே காட்சியையும் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வைத்து இருப்பார். கார்த்திக் பாட கவுண்டமணி வாய் அசைப்பார் பாருங்கள்.. மாமா ஏ மாமா… என்ற பாடல் தான் அது.
அதே போல உத்தமபுத்திரன் படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்துத் தான் பல காட்சிகளை காமெடியாக உல்டா செய்து இம்சை அரசன் 23ம் புலிகேசி எடுக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்தால் தெரியும். மேற்கண்ட இருபடங்களுமே காமெடியில் பட்டையைக் கிளப்பியவை.
இது புதுசா இருந்தால் என்ன பழசா இருந்தால் என்ன என்று நாமும் ரசிப்பதற்குத் தானே எடுத்து இருக்கிறார்கள் என்று கடந்து செல்வோம். அதே நேரம் இப்படியும் கூட சிந்தித்து இருக்கிறார்களே என்பது தான் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சுருக்கமாக சொல்வதென்றால் ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்றே தெரிகிறது.
இன்னும் பல பழைய படங்களைத் தூசி தட்டி ஆராய்ந்து பார்த்தால் இந்தப் பட்டியல் வந்து கொண்டே இருக்கும் என்றே தெரிகிறது.