Cinema News
25 ஆயிரம் பாட்டு பாடியிருக்கேன்!. ஆனா இப்ப ஆயிரம் கூட பாட முடியாது!.. ஃபீல் பண்ணும் மனோ!..
தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் உள்ளனர். இருந்தாலும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்பவர்கள் வெகு சிலர் தான். அப்படி 80களில் தன் மாயாஜாலக் குரலால் வசீகரம் செய்தவர் மனோ. இவரது பாடலைக் கேட்கும்போது நமக்கே சில சமயம் இது எஸ்பிபி.யா, மனோவா… யார் பாடினால் என்பதில் குழப்பம் வந்து விடும்.
25 ஆயிரம் பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார் பாடகர் மனோ. அந்த அளவு இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரான மனோ 25 ஆயிரம் பாடல்களைத் தாண்டி விட்டார். இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
இது வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்பு. இதைத் தக்க வைக்கணும். ஹிட்டாச்சுன்னா இன்னும் 100 பாடல்கள் கிடைக்கும்னு தான் பாடுறாங்க. தெலுங்குல 10 ஆயிரம், தமிழ்ல 10 ஆயிரம், கன்னடம்ல 4 ஆயிரம், பெங்காலி, ஒரியா, இந்தி மொழிகள் எல்லாம் சேரும்போது 1000 பாடல்கள்னு 25ஆயிரம் பாடல்கள் வந்துருக்கு.
இது உண்மையாகவே எல்லா மொழிகளிலும் பாடியது எனது பாக்கியம். சென்னையில் வந்து பாடல் ரெக்கார்டு பண்ணினால் செலவு குறையும். ஸ்வர்ணலதா, மின்மினி, சித்ரா இவங்க கூட பாடுற வாய்ப்பு சென்னைல பாடும்போது தான் கிடைச்சது.
இது ஒரு மைல் கல் தான். நானே இன்னும் ஒரு 1000 பாடல்கள் பாடணும்னா 10 முதல் 15 வருஷமாகும். ஏன்னா டிரண்ட் மாறிடுச்சு. எஸ்.பி.பி.யோட சாதனையை பார்க்க முடிஞ்சுது. அவருக்கு முன்னால யாரையும் பார்க்கல. நான் எம்எஸ்.விஸ்வநாதன் சார்ட அசிஸ்டண்டா இருக்கும்போது டிஎம்எஸ் ஐயாவைப் பார்த்தேன். கண்டசாலாவ பார்க்க முடியல. பி.பி.ஸ்ரீவாஸ் பாடி பார்த்திருக்கேன். சீர்காழி கோவிந்தராஜன் அய்யா பாடி நான் பார்த்திருக்கேன்.
செந்தமிழ் தேன்மொழியாள் பாடலைப் பாடிய டி.ஆர்.மகாலிங்கத்தைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா பார்க்க முடியல. ஏ…ராஜா ஒன்றாவோம் இன்று என ஜல்லிக்கட்டு படத்துல பாடினேன். ஏ… சாமி வருது சாமி வருது வழியை விடுங்கடான்னு எஸ்.பி.பி,யோட சேர்ந்து பாடிருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.