Cinema History
வாரிசை ஜெயிக்க வைக்க முடியாமல் தோத்துப்போன பிரபலங்கள்!.. சொல்லி அடித்த கில்லி விஜய்!..
தமிழ் சினிமாவில் கணிசமான கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். சினிமா யாரை ஏற்கும்.. யாரை நிராகரிக்கும் என்பதை சொல்லவே முடியாது. குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வரும் எல்லோரும் வெற்றி பெற்று பெரிய லெவலுக்கு போவார்கள் என சொல்லவும் முடியாது.
ரஜினிகாந்த், கமல், சத்தியராஜ், சரத்குமார், விஜயகாந்த் போன்றோருக்கு சினிமா பின்னணி கிடையாது. ஆனால், அவர்கள் மேலே வந்தார்கள். தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி காட்டினார்கள். அதேநேரம், சினிமா பின்னணியில் இருந்து வந்த கார்த்திக், பிரபு போன்றோரும் தங்களுக்கென இரு இடத்தை பிடித்தனர்.
இயக்குனர் பாக்கியராஜ் அவராகவே சினிமாவில் முன்னேறி வந்தார். பல ஹிட் படங்களை கொடுத்து திரைக்கதை மன்னன் என பெயர் வாங்கினார். இவரின் பல படங்கள் சில்வர் ஜூப்ளி. குறிப்பாக பெண்களுக்கு பிடித்த ஒரு ஹீரோவாகவும், இயக்குனராகவும் பாக்கியராஜ் இருந்தார். ஆனால், இவரின் மகன் சாந்தனுவை ஒரு ஹீரோவாக அவரால் உருவாக்க முடியவிலை. அந்த வருத்தம் இப்போதும் அவருக்கு இருக்கிறது.
அதேபோல், கல்லை கூட நடிக்க வைத்துவிடுவார் என பெயர் வாங்கியர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. பல புதிய நடிகர் மற்றும் நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். ஆனால், தனது மகன் மனோஜை அவரால் ஹீரோவாக உருவாக்க முடியாமல் தோற்றுப்போனார்.
பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து பின்னால் இயக்குனராக மாறி பாக்கியராஜை போலவே ரசிகர்களிடம் பிரபலமாகி பல ஹிட் படங்களை இயக்கி நடித்தவர் பாண்டியராஜன். ஆனால், அவரால் அவரின் மகன் பிரித்திவி ராஜனை ஹீரோவாக வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதேபோல்தான், இயக்குனர் மணிவண்ணன் தனது மகன் ரகுவண்ணனை ஹீரோவாக உருவாக்க முடியவில்லை. 2 படங்களில் நடித்துவிட்டு அவர் காணாமல் போனார்.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.வாசு. அவரால் அவரின் மகன் சக்தியை ஹீரோவாக உருவாக்க முடியவில்லை. அவரும் சக்தியை வைத்து சில படங்களை இயக்கினார். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை. கடைசியில் குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரிடம் சிக்கி அசிங்கப்பட்டு நின்றதுதான் மிச்சம்.
சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு சினிமாவில் நுழைந்து கும்கி உள்ளிட்ட சில ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர் நடிப்பில் வெளியான எந்த படங்களும் ஓடவில்லை. நடிகர் சத்தியராஜின் மகன் சிபிராஜும் பல படங்களில் நடித்தாலும் ஒரு ஹீரோவாக அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. இந்த வரிசையில் வெற்றி பெற்ற ஒருவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டுமே. தனது விஜயை சினிமாவில் அறிமுகம் செய்து பெரிய நடிகராக்கி வெற்றி பெற்றார்.