Connect with us
VMBR

Cinema News

அப்படியா எழுதினார் வைரமுத்து? நாள் முழுவதும் காத்துக் கிடந்த பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் வந்த வித்தியாசமான படம் வேதம்புதிது. இன்றைய அரசியல் சூழலில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது.

இதையும் படிங்க… ரஜினி கமலை வைத்து ஒரு படம் கூட எடுக்கலயே! காரணம் என்ன தெரியுமா? டி. ஆரே சொல்லியிருக்காரு பாருங்க

‘மாட்டுவண்டி சாலையில…’என்ற ஒரு பாடல் இந்தப் படத்தில் வருகிறது. மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கான சூழல் இதுதான். சத்யராஜின் மகன் ராஜா. இவர் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்.

அதே போல சாருஹாசனின் மகள் அமலா பிராமண வகுப்பைச் சார்ந்தவர். இருவரும் காதலிக்கின்றனர். இந்நிலையில் அமலாவை வேறு ஒருவருக்கு மணமுடிப்பதற்காக கூட்டுவண்டியில் இன்னொரு ஊருக்கு அழைத்துச் செல்கிறார் சாருஹாசன்.

அந்த வேதனையைத் தாங்க முடியாமல் ராஜா தவிக்கிறார். இதுதான் அந்தப் பாடலின் சூழல். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. முதன்முறையாக பாரதிராஜா இளையராஜாவைத் தவிர்த்து விட்டு தேவேந்திரனை இசை அமைப்பாளராக்கி இருப்பார். இவர் இசை அமைத்த அனைத்துப் பாடல்களும் படத்தில் சூப்பர்ஹிட்.

இந்தப் பாடலில் செனாய், வயலின் கருவிகள் சோகத்தைத் ததும்பச் செய்யும். ‘மாட்டு வண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா…’ என்ற பாடலில் ஏன் மாட்டு வண்டி, கூட்டு வண்டி என கேட்கலாம். மாட்டு வண்டி என்றால் பாரம் ஏற்றுவது. கூட்டு வண்டி என்றால் மனிதர்களை ஏற்றுவது.

காட்டு மரங்கள் எல்லாம் கைநீட்டி அழைக்குது என்று இந்தப் பாடலில் கவிஞர் தன் கற்பனையைச் சொருகி இருப்பார். அது போல மாட்டுச் சலங்கை எல்லாம் மகளோடு அழுகுதுன்னு தன்னோட கவிநயத்தை எடுத்துக் காட்டியுள்ளார் வைரமுத்து. இந்தப் பாட்டை முடிக்கும் ஒரு இடத்திற்காகத் தான் பாரதிராஜா வைரமுத்துவுக்காக ஒருநாள் காத்து இருந்தாராம்.

Vetham Puthithu

Vetham Puthithu

‘பச்சைக்கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவமென்ன’ என்று ஒரு வரியைப் போட்டு இருப்பார். மக்கள் இதில் வரும் ‘பண்ணி’யை ‘பன்றி’ என நினைத்து விடக்கூடாது என பாரதிராஜா வைரமுத்துவை தேடி அலைந்தாராம்.

‘பன்றி’ யைக் கிராமப்புறங்களில் ‘பன்னி’ என்று சொல்வார்கள். அது ஒரு வழக்குச் சொல். அப்போது செல்போன் எல்லாம் கிடையாது என்பதால் வைரமுத்துவை அழைக்க காலதாமதம் ஆகியது. அதற்கு கிட்டத்தட்ட ஒரு கால்ஷீட் அதாவது 7 மணி நேரமாகி விட்டது. அதன்பிறகு தான் கவிஞர் வருகிறார்.

‘பச்சைக் கிளியிரண்டும் பண்ணி வைத்த பாவமென்ன..’ என்ற வரியை எடுத்து விட்டு ‘சின்னக்கிளி இரண்டும் செய்து விட்ட பாவமென்ன..’ என்ற வரியாக மாற்றுகிறார். கடைசியாக அன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன என்ற ஒரு வரியைப் போடுகிறார். இது தான் இந்தப் படத்தின் மையக்கருத்து. இப்படி பாரதிராஜா ஒரு வரியை மாற்ற கவிஞருக்காக ஒருநாள் காத்து இருந்துள்ளார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top