Cinema History
பாடல் வரிகளால் வந்த கோபம்!.. படப்பிடிப்பை நிறுத்திய எம்.ஜி.ஆர்!… அட அந்த படமா!…
60களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கிய இவர் நாடோடி மன்னன் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சரித்திர கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதேபோல், எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு தனி ஸ்டைல், பாணியை கடைபிடித்ததோடு மட்டுமில்லாமல் பல விஷயங்களில் பிடிவாதமாக இருந்தார். மது அருந்துவது போலவோ, புகை பிடிப்பது போலவே காட்சிகளில் நடிக்க மாட்டார். ஏனெனில், அவரை பார்த்து அவரின் ரசிகர்கள் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதுதான் அவரின் எண்ணம்.
அதேபோல், வில்லனாக நடிக்க மாட்டார். பெண்களை மட்டம் தட்டுவது போல் வசனம் பேசமாட்டார். சாதி பற்று கொண்டவராக நடிக்க மாட்டார். யாரையும் ஏமாற்றுவது போல காட்சிகளில் நடிக்க மாட்டார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் படத்தில் இடம் பெறும் பாடல் வரிகளை கூட கவனமாக பார்ப்பார்.
ஏவிஎம் தயாரிப்பில் அன்பே வா படத்தில் நடித்தபோது சரோஜாதேவி அவரின் நண்பர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரை கிண்டலடித்து பாடுவதுபோன்ற ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டது. நடிக்க வந்த எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை கேட்டதும் ஒப்பனை அறைக்கு போய்விட்டார். அங்கிருந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் ‘என்னாச்சி.. எம்.ஜி.ஆருக்கு என்ன கோபம்?’ என்பது புரியாமல் முழித்தனர்.
எம்.ஜி.ஆரின் உதவியாளர் வேகமாக ஓடி காரில் ஏறி எங்கோ சென்றார். யாருக்கும் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்த காரில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, வசனகர்த்தா ஆருர்தாஸ் ஆகியோர் வந்தனர். நேராக எம்.ஜி.ஆரின் அறைக்கு சென்றார்கள். அதன்பின் வேறொரு காரில் கவிஞர் வாலி வந்தார். அவரும் உள்ளே போனார். எனன நடக்கிறது என்பது புரியாமல் எல்லோரும் முழித்தனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் மூவரும் சிரித்தபடி வெளியே வந்தனர். எம்.ஜி.ஆரும் வெளியே வந்து ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். அதன்பின் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அதன்பின் ஆருர்தாஸ் ஏவிஎம் குமரனிடம் ‘அது ஒன்றுமில்லை. பாடல் வரிகளில் ‘நாடோடி. ஓட வேண்டும் ஓடோடி’ என வருகிறது. அது தன்னை சொல்வது போல் இருக்கிறது. அரசியல்ரீதியாக என்னை தாக்குவது போல இருக்கிறது என எம்.ஜி.ஆர் நினைத்தார். ’இல்லை அப்படி இல்லை.. மக்கள் அப்படி நினைக்கமாட்டார்கள். காட்சிப்படி உங்களை வீட்டிலிருந்து விரட்ட சரோஜாதேவி பாடும் பாட்டு இது’ என அவருக்கு புரிய வைத்தோம். அதன்பின் எம்.ஜி.ஆர் நடிக்க சம்மதித்தார்’ என சொன்னாராம்.
தான் நடிக்கும் காட்சிகளில் எம்.ஜி.ஆர் எவ்வளவு கவனமாக இருப்பார் என்பது இதுவே மிகப்பெரிய உதாரணம்…