Cinema News
எம்.எஸ்.வி கொடுத்த முதல் வாய்ப்பு!.. இப்படி ஆகிப்போச்சே!.. எஸ்.பி.பி வாழ்வில் நடந்த சோகம்!..
சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அது நடிப்பதற்கானாலும் சரி அல்லது பாடுவது போன்ற மத்த துறையாக இருந்தாலும் சரி. தமிழ் திரையுலகம் பல பாடகர்களை பார்த்திருக்கிறது. சினிமா துவங்கிய காலத்தில் நடிகர்களே சொந்த குரலில் பாட்டு பாடினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் வந்த பின் பின்னணி பாடகர்கள் வந்தார்கள்.
அப்படி 1950களில் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த முக்கிய பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் இவரின் குரல் பொருத்தமாக இருந்ததால் அவர்களின் ஆஸ்தான பாடகராக மாறினார். ஆனால், சினிமாவில் மாற்றம் எப்போதும் வரும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் போன்ற பாடகர்கள் வந்தனர்.
அவர்கள் எல்லாமே உச்சம் தொட்டார்கள். இதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் ரசிகர்களுக்கு எப்போதும் ஸ்பெஷல்தான். ஒரு ஆண் குயில் போல இனிமையான குரலை உடையவர் அவர். இளையராஜாவின் இசையில் ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்களுக்கு அவர் பாடிய பல நூறு பாடல்கள்தான் இப்போதும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட்.
எஸ்.பி.பி ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். அவர் வாய்ப்பு கேட்ட இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒருவர். ஆனால், ‘குரல் இன்னும் உடையவில்லை. தமிழ் உச்சரிப்பு சரியில்லை’ என சொல்லி அவரை ரிஜெக்ட் செய்தார் எம்.எஸ்.வி.
ஆனாலும், வாய்ப்புகளை பெற்று எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடினார் எஸ்.பி.பி. இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.பி.பி ‘ஒருமுறை பரணி ஸ்டுடியோவில் ஒரு பாடலை பாடிவிட்டு நான் வெளியே வந்தேன். அப்போது எம்.எஸ்.வி என்னை கடந்து போனார். என்னை பார்த்து நின்ற அவர் ‘நீதானே என்னிடம் பாட வாய்ப்பு கேட்ட அந்த தெலுங்கு பையன். அதன்பின் என்னை வந்து ஏன் பார்க்கவில்லை?’ என கேட்டார்.
நான் ‘இல்ல சார். தமிழை நன்றாக கற்றுக்கொண்டு உங்களிடம் வர வேண்டும் என நினைத்தேன். தற்போது அதற்கான பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறேன்’ என சொன்னேன். தமிழில் நான் இப்படி பேசியதை பார்த்து ஆச்சர்யப்பட்ட அவர் ‘பாட்டு பாட இந்த தமிழ் போதும்’ என சொல்லி ஒரு படத்தில் பாட எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது’ என எஸ்.பி.பி. சொல்லி இருந்தார்.