Cinema News
இந்த படம் மட்டும் வரட்டும் பாருங்க!.. எஸ்.கே.வின் நெகட்டிவ் இமேஜே மொத்தமா மாறிடுமாம்!..
சினிமா உலகில் எப்போதும் புதுப்புது இயக்குனர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். திடீரெனெ ஒரு இளம் இயக்குனர் வந்து கவனம் ஈர்ப்பார். ‘அட இப்படியும் படம் எடுக்க முடியுமா?’ என ஆச்சர்யப்படுத்துவார். பொதுவாக கலைப்படங்கள் வியாபார ரீதியாக வெற்றியை பெறாது என்றே சொல்வர்கள்.
ஆனால், வித்தியாசமான, புதியதாக, ஒரு கலைப்படமாக எடுக்கப்பட்டு தியேட்டரில் நல்ல வசூலை பெற்ற படங்களும் இருக்கிறது. மண்டேலா, குட் நைட், ஜோ என சில உதாரணங்களை சொல்லலாம். தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் இதுபோன்ற படங்களை தயாரிக்க முன் வரமாட்டார்கள்.
ஏனெனில் தியேட்டரில் வசூலை பெறாது என்கிற எண்ணம்தான். எனவே, இதுபோன்ற கதைகளை வைத்திருக்கும் உதவி இயக்குனர்கள் பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்குவார்கள். ஹீரோக்களின் பின்னால் அலைய வேண்டும். எல்லாம் கூடி வந்தால் மட்டுமே இதுபோன்ற கதைகள் திரைக்கு வரும்.
அப்படி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘குட் நைட்’ படத்தை இயக்கியிருந்தவர் வினாயக் சந்திரசேகரன். வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் மணிகண்டன் இப்படத்தின் கதையின் நாயகனாக நடித்திருந்தார். குறட்டை சத்தம் அதிகமாக வரும் குறைபாடு உள்ள ஒருவன் சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக திரைக்கதை அமைத்திருந்தார் வினாயக்.
இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அந்த இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு ஒரு தங்க செயினையும் பரிசாக அணிவித்தார். மேலும், ‘நீங்கள் அடுத்து எழுதும் கதையில் நான் நடிக்கிறேன். கதையை எழுத எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அழைக்கும்போது நான் நடித்து கொடுக்கிறேன்’ என வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.
சிவகார்த்திகேயனுக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்போதும் உண்டு. ஆனால், அவருக்கு அதுபோன்ற படங்கள் அமைவதில்லை. அதனால்தான் மண்டேலா பட இயக்குனரின் அடுத்த படமான மாவீரன் படத்தில் நடித்தார். இப்போது வினாயக் சொல்லியுள்ள கதையில் சிவகார்த்திகேயன் நடித்தால் அது சமூகவலைத்தளங்களில் அவர் மீதுள்ள நெகட்டிவ் இமேஜை மாற்றும்படி இருக்கும் என சொல்லப்படுகிறது.