மார்க்கெட் போய் மஞ்சப்பை தூக்கிக்கிட்டு மதுரைக்கு போறான்னு சொல்லுவாங்க!.. கேப்டன் அடித்த கமெண்ட்!..

Published on: July 17, 2024
---Advertisement---

சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவர்தான் விஜயகாந்த். அவருக்கு துணையாக அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் வந்தார். ராவுத்தருக்கு கதாசிரியர் ஆக வேண்டும் என்பது ஆசை. சென்னை தி நகரில் உள்ள ரோஹினி ஹோட்டலில் அறை எடுத்து தங்கி வாய்ப்பு தேடினார்கள்.

பல அவமானங்களை சந்தித்தார் விஜயகாந்த். விஜயராஜ் என்கிற பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்துக்கொண்டார். ‘அதான் ரஜினிகாந்த் இருக்காரே. விஜயகாந்த் எதுக்கு?’ என சிலர் நக்கலடித்தார்கள். விஜயகாந்த் தளரவில்லை. பல கிண்டல், கேலிகளை தாண்டி வாய்ப்பை பெற்றார்.

அவருக்கு ஜோடியாக நடிக்க அப்போதிருந்த நடிகைகள் தயங்கினார்கள். அதையும் மீறி யாராவது நடிக்க முன்வந்தால் ‘இவனுக்கெல்லாம் ஜோடியாக நடித்தால் உன் மார்க்கெட் போய்விடும்’ என சொல்லி பயமுறுத்தி படத்திலிருந்து விலக வைத்தார்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் வந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க துவங்கியதால் அவருக்கு எல்லாமுமாக மாறிப்போனார் ராவுத்தார். விஜயகாந்த்துக்காக கதை கேட்பது, சம்பளம் பேசுவது, கால்ஷீட் கொடுப்பது என ஆல் இன் ஆல் அவர்தான். அவரை கேட்காமல் எதையும் செய்யமாட்டார் விஜயகாந்த். அப்படி ஒரு நட்பும், புரிதலும் இருவருக்கும் இருந்தது.

ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அவ்வப்போது நடிக்க வாய்ப்புள்ள வைதேகி காத்திருந்தாள். உழவன் மகன், செந்தூரப்பூவே, சின்னக் கவுண்டர் போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விஜயகாந்த். இந்த வரிசையில் விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம்தான் வானத்தை போல.

இந்த படத்தின் படப்பிடிபு நடந்து கொண்டிருந்தபோது கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து கொண்டிருந்தார் விக்ரமன். அப்போது ஒரு மஞ்சள் பையை கையில் எடுத்துக்கொண்டு முதுகை காட்டி விஜயகாந்த் நடந்து போவது போல படத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார் விக்ரமன். இதை விஜயகாந்திடம் சொன்ன போது அவர் ‘இப்படி படம் முடிஞ்சா.. விஜயகாந்த் மார்க்கெட் போய் மஞ்சபை தூக்கிக்கிட்டு மதுரைக்கே போறான்னு’ கிண்டல் அடிப்பாங்க’ என அவர் சொன்னதும் அங்கிருந்த எல்லோரும் சிரித்திருக்கிறார்கள்.

விஜயகாந்தின் நகைச்சுவை உணர்வு இந்த சம்பவத்தை ஒரு உதாரணமாகவும் சொல்லலாம்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.