Biggboss Tamil: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடர்ச்சியாக சிக்கலை சந்தித்து வரும் நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் அணுகுமுறை தற்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது இதுகுறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன்
பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஜேம்ஸ் வசந்தன் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இசையமைத்தார். அதன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து திரைப்படங்கள் பணியாற்றி வருகிறார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி குறித்து தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் இந்த சீசனில் தற்போது விஜய் சேதுபதி குறித்து இவர் போட்டு இருக்கும் நீண்டதொரு விளக்கம் வைரலாகி வருகிறது.
ஜேம்ஸ் வசந்தனின் பதிவு
நிகழ்ச்சியின் முன்னாள் நடத்துநர் கமல்ஹாசன்; இப்போது விஜய் சேதுபதி. இருவரும் அவரவர் பாணியில் நடத்துவதும், அதற்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுவதும் இயல்புதானே. கமல்ஹாசன் மேலிருந்தக் குற்றச்சாட்டு “எல்லாரிடமும் ரொம்பவும் மென்மையாக, கொஞ்சம்கூடக் கடிந்துகொள்ளாமல், கண்டிப்பு இல்லாமல் இருக்கிறார்” என்பது.
தொடக்கத்தில், விஜய் சேதுபதியின் இயல்பான, அதிரடியான பாணியைக் கண்டு வியந்தவரும், பாராட்டியவரும் இன்று வெறுப்படையும் நிலைக்குச் சென்றிருக்கின்றனர்.
கமல்ஹாசனின் பண்பு
போட்டியாளர்களிடம் உரையாடும்போதும், பிரச்சனைகளை ஆராய்ந்தபோதும் கமல்ஹாசனிடம் பண்பு இருந்தது, முதிர்ச்சி இருந்தது, ஞானம் இருந்தது, மதிநுட்பம் இருந்தது, சமூகப் பொறுப்பு இருந்தது. ஒவ்வொருவரையும் ஆளுமைகளாகவே பார்த்தார்; கையாண்டார்.
அவர்களை நேரடியாகக் குற்றப்படுத்தியதில்லை, சொற்களால் காயப்படுத்தியதில்லை, மட்டுப்படுத்தியதில்லை, தனிப்பட்ட விதத்தில் தாக்கியதில்லை, அவர்கள் உணர்வுகளைச் சீண்டியதில்லை, தனக்கிருந்த உயர்பொறுப்பைக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தியதில்லை. இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேனென்று புரிந்துகொள்பவர் புரிந்துகொள்ளட்டும்.
இதையும் படிங்க: சினிமா உலகில் யாருமே செய்யாத விஷயம்… தன்னலம் கருதாமல் செய்த நெப்போலியன்
விஜய் சேதுபதியின் பிரச்னை
இவர் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறார் என்பது ஒருபுறம். அதனால் பொதுநலக் கேடு ஒன்றுமில்லை. அது அவர் இயல்பு. நமக்குப் பிரச்சனையில்லை. ஆனால், அத்தனைக் குற்றங்கள் செய்த ஆண்களை விசாரிக்காமல், ஏற்கனவே அவர்களால் உணர்வுபங்கம் செய்யப்பட்டப் பெண்ணை இவரும் சேர்ந்து குற்றப்படுத்தி, சிறுமைப்படுத்தி, தான் செய்ததுதான் தவறு என்று சொல்லவைத்து நொறுங்கவைத்து மகிழ்ந்ததையும் நேற்று கண்டபோது, தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மேலோங்கியது.
அதோடு நிற்கவில்லை. வெறிபிடித்த விலங்குகள் போல சுற்றிநின்று அந்தப் பெண்ணை உணர்வளவில் சின்னாபின்னமாக்கிய அந்த ஆண்களைப் பாராட்டி, Bigg Boss வரலாற்றிலேயே சிறந்த பங்கேற்பாளர் என்கிற பட்டத்தையும் வழங்கியது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

போட்டியாளர்களும் உங்களையும் என்னையும் போல மனிதர்தானே? அவரவர்க்கு ஒரு பேசும், சிந்திக்கும், செயல்படும் விதம் இருப்பதும் இயற்கைதானே? அதை கிண்டலடிப்பதும், கடுமையாக சாடுவதும், இவர் நினைப்பதையே அவர்கள் சொல்லவேண்டும்.
அதை இவர் விரும்பும் வண்ணமே சொல்லவேண்டும் என்பதும், சொல்லாவிட்டால் சினமடைவதும், சலித்துக்கொள்வதும், எதிரில் நிற்பவரைப் பொதுவெளியில் கேவலப்படுத்துவதும், வேண்டா வெறுப்போடு அவர்களிடம் உரையாடுவதும் ஒரு தொகுப்பாளர்க்கு அழகா? எனவும் கேள்வி கேட்டு இருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவைக் காண: https://www.facebook.com/JamesVasanthanMusician





