ஊமை விழிகள் படத்துக்கு விஜயகாந்த் செய்த உதவி!.. அதையும் எப்படி செஞ்சிருக்கார் பாருங்க!…

Published on: March 18, 2025
---Advertisement---

Vijayakanth: விஜயகாந்த் ஒரு ஆக்சன் ஹீரோவாக பார்க்கப்பட்டாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல கதைகளிலும் நடித்திருக்கிறார். வெறும் ஆக்சன் கதைகளில் மட்டுமே நடித்துகொண்டிருந்தபோது சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்திருந்தார். விஜயகாந்தால் இப்படியும் நடிக்க முடியும் என அப்படம் காட்டியது. எனவே, அவ்வப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம்தான் ஊமை விழிகள். இந்த படத்தில் டி.,எஸ்.பி தீன தயாளனாக கலக்கி இருப்பார் விஜயகாந்த். 1986ம் வருடம் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்போது வரை பேசப்படுகிறது. இந்த படத்தை அரவிந்த்ராஜ் இயக்க ஆபாவணன் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் அருண் பாண்டியன், சந்திரசேகர், இளவரசி, ஜெய் சங்கர், செந்தில், ரவிச்சந்திரன் என பலரும் நடித்திருந்தனர். ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பல இளம்பெண்களையும் கடத்தி அவர்களின் கண்களை பறித்துக்கொண்டு அவர்களை கொலை செய்வார். இதற்கு அரசியல்வாதி ஒருவரும் அவருக்கு துணையாக இருப்பார்.

இந்த விவகாரத்தை அருண்பாண்டியன், சந்திரசேகர், ஜெய் சங்கர் ஆகியோர் எப்படி வெளியே கொண்டு வருகிறார்கள்?, விஜயகாந்த் அவர்களுக்கு எப்படி உதவி செய்கிறார்? என கதையை அமைத்திருந்தார்கள். இந்த பட வாய்ப்பு வந்தபோது ‘பிலிம்ஸ் இன்ஸ்டியூட் பசங்க ஆர்ட் பிலிம் எடுப்பாங்க. என்னால் முடியாது’ என சொன்னார் விஜயகாந்த். அதன்பின், அவரின் நண்பர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை சம்மதிக்க வைத்து நடிக்கவைத்தார்.

இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் அரவிந்த்ராஜ் ‘ இந்த படத்திற்காக விஜயகாந்திடம் 10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டேன். ஒரு பக்கம் படத்தை எடுக்க பணம் இல்லாமல் தயாரிப்பாளரும் கஷ்டப்பட்டார். எனவே, படத்தை சுருக்கி சுருக்கி எடுத்தோம். இதைப்பார்த்த விஜயகாந்த் ‘10 நாட்கள் மட்டுமே நான் நடிப்பேன் என்பதால் காட்சிகளை சுருக்க வேண்டாம். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நடித்து கொடுக்கிறேன். நீங்கள் விரும்பிய படி படத்தை எடுங்கள்’ என சொல்லி நடித்து கொடுத்தார்.

மேலும், பணம் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்பதை புரிந்துகொண்டு எங்களுக்கு உதவ முடிவெடுத்தார். நேரிடையாக அதை செய்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என நினைத்து மதுரையில் ஒரு வினியோக உரிமை அலுவலகத்தை துவங்கி ஊமை விழிகள் படத்தின் மதுரை உரிமையை வாங்கிகொண்டார். மேலும், அதற்கான அட்வான்ஸ் என சொல்லி ஒரு தொகையை கொடுத்தார். அந்த பணத்தை வைத்து பல காட்சிகளை எடுத்தோம். அவரை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment