Connect with us

latest news

கண்ணதாசனை வம்பிழுத்த எம்எஸ்வி… போட்டாரே ஒரு போடு அந்தப் பாட்டால…!

பாடல் எழுத வேண்டுமே… இன்னும் கவிஞரைக் காணோமேன்னு கண்ணதாசனின் வருகைக்காக எல்லோரும் காத்திருந்தாங்க. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. அடிக்கடி கைகடிகாரத்தைப் பார்த்தார். டென்ஷன் ஆகி விட்டார்.

அதைக் கவனித்து விட்ட கதாசிரியர் சித்ராலயா கோபு ‘என்னண்ணே… ரொம்ப டென்ஷனா இருக்குறீங்க?’ன்னு கேட்டுள்ளார். அதற்கு எம்எஸ்வி, இந்தப் பாட்டைக் கம்போஸ் பண்ணிட்டு அடுத்து வேலுமணி சாரோட பணத்தோட்டம் பட ரீரெக்கார்டிங்குக்குப் போகணும். ‘இன்னும் இந்த ஆளைக் காணோமே…’ன்னு புலம்பினார்.

அதேநேரம் இயக்குனர் ஸ்ரீதரோ, ‘நீங்க இந்தப் பாட்டைக் கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் வேறு இடத்திற்குப் போகணும்’னு கண்டிஷனா சொல்லி விட்டார். இதற்கிடையில் சரவணா பிலிம்ஸில் இருந்து எம்எஸ்விக்கு போன் வந்துக்கிட்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து விட்டார் எம்எஸ்வி. உடனே, ‘என்னய்யா இந்தக் குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்குறாரே…’ன்னு எரிச்சல்பட்டுக் கத்திவிட்டாராம்.

சிறிது நேரத்தில் கண்ணதாசனும் வந்துவிட்டார். பாடலுக்கான சிச்சுவேஷனை ஸ்ரீதர் சொல்கிறார். அது என்னன்னா ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கணவன் தான் எப்படியும் இறந்து விடுவோம் என்று நினைக்கிறான். அந்த டாக்டரோ தன் மனைவியின் முன்னாள் காதலன்.

இதுவும் அவனுக்குத் தெரிந்து விடுகிறது. தான் இறந்து விட்டால் தனது மனைவியை அந்த டாக்டர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லும் தருணம். மனம் நொறுங்கிப் போன அவனது மனைவி தன் சோகத்தை நெஞ்சில் சுமந்தபடி பாடும் பாட்டு.

ஆரம்பத்தில் இருந்து கண்ணதாசனுக்கு வரிகள் வரவே இல்லை. சிறிது நேரம் யோசித்த அவர் பாத்ரூம் போனார். அங்கு ஒருவர் கண்ணதாசனிடம் எம்எஸ்வி ‘உங்களை குடிகாரன்னு திட்டுனாரு..’ன்னு போட்டுக் கொடுக்கிறார். அப்புறம் கண்ணதாசனுக்கு கோபம் வரவே இல்லை.

‘ஏன்டா விசு நீ என்னைக் குடிகாரன்னு திட்டினியாமே.. ஆச்சரியமா இருக்கே… அப்படி எல்லாம் சொல்ல மாட்டாயே… நீயா அப்படி சொன்ன. என்னால நம்பவே முடியல’ என்றார். அப்புறம் ராகத்தோடு ‘சொன்னது நீ தானா சொல் சொல்… என்னுயிரே…’ என்று பாடிக் காட்டியுள்ளார். ஸ்ரீதருக்கும் உடனே பாட்டு பிடித்துவிடுகிறது. யூனிட்டே கண்ணதாசனின் புலமையை அண்ணாந்து பார்த்தது.

1962ல் சித்ராலயா கோபு, ஸ்ரீதர் கதை எழுத ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இந்தப் படத்தில் முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா, குட்டி பத்மினி, வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.வி. இசை அமைத்துள்ளார். இது ஒரு வித்தியாசமான படம். முழுக்க முழுக்க ஒரு மருத்துவமனைக்குள் எடுக்கப்பட்ட முக்கோண காதல் கதை. ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது. அத்தனைப் பாடல்களும் ஹிட். இந்தப் படத்தில் எங்கிருந்தாலும் வாழ்க, என்ன நினைத்து என்னை, முத்தான முத்தல்லவோ, நினைப்பதெல்லாம், ஒருவர் வாழும் ஆலயம், சொன்னது நீதானா ஆகிய முத்து முத்தான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top