
Cinema News
சிங்கிள் மட்டுமில்ல.. படத்தையும் தெறிக்கவிட்ட ஆதிக்.. ‘குட் பேட் அக்லி’ பார்த்தவர்கள் சொன்ன விஷயம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படம். பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டிய குட் பேட் அக்லி விடாமுயற்சி படத்தால் ஏப்ரல் 10 ஆம் தேதி தள்ளிப் போனது. ஆனாலும் இந்த தேதியும் சந்தேகம் தான் என்ற கருத்தும் இருந்தது. ஆனால் சொன்ன தேதியில் உறுதியாக இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
கண்டிப்பாக ஏப்ரல் 10 ஆம் தேதி தான் குட் பேட் அக்லி படம் ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா ஆறாவது முறையாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் பிரசன்னா மற்றும் சுனில் ஆகியோரும் நடித்துள்ளனர். அர்ஜூன் தாஸ் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ். முதலில் தேவி ஸ்ரீபிரசாத்தான் இசையமைப்பதாக இருந்தது.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தேவி ஸ்ரீபிரசாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததனால் படத்தில் இருந்து தேவி ஸ்ரீபிரசாத் விலகினார். ஏற்கனவே வீரம் படத்திற்கு இவர்தான் இசையமைத்தார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பல விதமான கெட்டப்களில் அஜித் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
அதுவும் அவர் முந்தைய படங்களில் போட்ட கெட்டப்களுடன் வருவதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷ் கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் கைகோர்த்த திரைப்படம் தான் குட் பேட் அக்லி. முதலில் கிரீடம் படத்தில் இணைந்தார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதனால் இந்தப் படத்தில் எப்படிப்பட்ட பிஜிஎம், மியூஸிக் போட்டிருப்பார் என்றும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க நேற்று படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெறியில் ஆழ்த்தியுள்ளது. அஜித் ரசிகர்கள் எப்படி எதிர்பார்த்தார்களோ அதற்கேற்ப படத்தின் பாடல் அமைந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் பிசினஸ் கட் என்ற ஒன்று இருக்கிறது. அதாவது முக்கியமான காட்சிகளை ஒன்று சேர்த்து வினியோகஸ்தர்கள், முக்கிய பிரபலங்கள் என பார்ப்பார்கள்.
அப்படி இந்தப் படத்தின் பிசினஸ் கட்களை பார்த்தவர்கள் மிரண்டு போய்விட்டார்களாம். அப்படி தெறிக்கவிட்டிருக்கிறாராம் ஆதிக். போட்ட முதலீடையும் தாண்டி கலெக்ஷனை அள்ளிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.