மதுரையை சேர்ந்த விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் கலக்கியவர் இவர். ரஜினி, கமலை விட இவரின் படங்கள் அதிக வசூல் செய்ததெல்லாம் நடந்திருக்கிறது.
விஜயகாந்துக்கு சொந்தமாக சில சொத்துக்கள் இருந்தது. அதில் முக்கியமானது கோயம்பேட்டில் இருந்த திருமண மண்டபம். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது பாலம் வருவதாக சொல்லி அந்த மண்டபத்தின் சில பகுதிகளை இடித்தார்கள். அதேபோல், விஜயகாந்துக்கு சொந்தமாக ஆண்டாள் அழகர் கல்லூரி இருந்தது.
சென்னையிலிருந்து 70 கி.மீ தூரத்தில் செங்கல்பட்டு மாமாண்டூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் 2001ம் வருடம் இந்த கல்லூரி துவங்கப்பட்டது. இந்த கல்லூரியில் பிஇ, பி.டெக் படிப்புகளில் 7 பிரிவுகளும், முதுகலை படிப்புகளில் 4 பிரிவுகளும் இருக்கிறது. இந்த கல்லூரியில் ஏழை மாணவர்கள் பலரையும் இலவசமாக படிக்க வைத்தார் விஜயகாந்த். பலரிடமும் மிகவும் குறைவான கட்டணம் வாங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் குழுமத்திற்கு கை மாற்றப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் குடும்பத்திற்கு கடன் தொடர்பான சில நெருக்கடிகள் இருந்தது. ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை சார்பில் வங்கியில் வாங்கிய 5.52 கோடி கடனுக்காக கல்லூரி உள்ளிட்ட விஜயகாந்தின் சில சொத்துக்களை ஏலமிடப்போவதாக 2019ம் வருடமே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்தது.
இதை சட்டரீதியாக சந்திப்போம் என பிரேமலதா அப்போது சொன்ன நிலையில் இப்போது இந்த கல்லூரி கை மாறியிருக்கிறது. பெரம்பலூரை மையமாக கொண்டு இயங்கும் தனலட்சுமி சீனிவாசன் குழுமம் மெடிக்கல் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளையும் நிர்வகித்து வருகிறது. விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி சுமார் 150 கோடிக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
