பாடலாசிரியர் சினேகனின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் நேரில் சென்று மாலை போட்டு மரியதை செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றி புத்தம் புது பூவே திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள சினேகன் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகியிருந்தார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்த சினேகன் சின்னத்திரை நடிகை கன்னிகாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு காதல், கவிதை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று சினேகனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்தினை தெரிவிக்க நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் நேரில் சென்று சால்வை மற்றும் மாலை அணிவித்து பூக்கள் தூவி சிம்புவின் மன்மதன் பாட்டை பாடியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், கூல் சுரேஷ் கடந்த வாரம் வெளியான தனுஷின் குபேரா படத்தை தவிர்த்து டிஎன்ஏ படத்திற்கு சென்ற வீடியோவும் வைரலாகியிருந்தது.

கூல் சுரேஷ் திரைப்பட வெளியீட்டன்று தனது நகைச்சுவையான மற்றும் உணர்ச்சிகரமான விமர்சனங்களால் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார். சில நேரங்களில் அவர் செய்யும் செயல்களாலும் பேசும் பேச்சுக்களாலும் சர்ச்சையிலும் சிக்கிக் கொள்கிறார். சமீபத்தில், நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூல் சுரேஷ் கன்னத்தில் அப்போதே அறை விட்டிருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது என தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *