Coolie: ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம்தான் கூலி. கமலுடன் விக்ரம் செய்த லோகேஷ் இப்போது ரஜினியுடன் இணைந்திருக்கிறார். ரஜினி, லோகேஷ் இருவருக்குமே ரசிகர்கள் அதிகம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரும், அனிருத்தும் இணைந்து பாடியுள்ள பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என கணிக்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாடல் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.
பேன் இண்டியா படமாக கூலி உருவாகியிருக்கிறது. எனவே, நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், சௌபின் சாஹிர் ஆகியோரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாதியை எடிட் செய்து வைத்துவிட்டார் லோகேஷ். அதைப்பார்த்த ரஜினிக்கு முழு திருப்தி என்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா குபேரா படத்தின் புரமோஷனுக்காக பல ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது அவரிடம் கூலி படம் பற்றிய அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது. அவரும் பல விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்.
லோகேஷை என்னை பார்க்க வந்த போது ‘வில்லனாக நடிக்க உங்களுக்கு சம்மதமா?. இல்லையென்றால் சொல்லிவிடுங்கள். ஒரு கப் டீ குடிச்சிட்டு நான் கிளம்புறேன்’ என்றார். ‘கதை சொல்லுங்க. நல்லா இருந்தா நடிக்கிறேன்’ என சொன்னேன். அவர் பாதி சொல்லும்போதே எனக்கு பிடித்துவிட்டது. நடிக்கும்போது ‘இப்படி யாராவது இருப்பார்களா?’ எனக்கேட்டேன். ‘இருப்பாங்க சார் மக்கள் எவில்’ என சொன்னார். இந்த படத்தில் நடித்தபின் பெண்களிடம் நான் நடந்துகொள்வதே மாறிவிட்டது. நான் வில்லனாக இருந்தாலும் லோகேஷ் என்னை அழகாகவே திரையில் காட்டியிருக்கிறார். கூலி மற்றும் குபேரா போன்ற படங்கள் என்னை ஒரு நல்ல நடிகனாகவே மாற்றியிருக்கிறது’ என பேசியிருக்கிறார்.
