Cinema News
எந்த ஹீரோவும் இதுவரை செய்யாத ஒரு விஷயம்… அட ராஜேஷ் செய்து இருக்கிறாரே…!
பெரும்பாலும் ஒரு மனிதர் இறந்ததுக்கு அப்புறம்தான் அவரோட சிறப்புகள் வெளியே தெரியும். கே.பாலசந்தரின் மகன் பாலகைலாசம் எப்படிப்பட்ட ஆற்றல் மிக்க அற்புதமான மனிதர் என்பது அவர் இருக்கும் வரை பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. அவர் இறந்த பிறகு அத்தனை தகவல்கள் வெளிவந்தன. எத்தனை பேர் வாழ்க்கையில் முன்னேற அவர் உதவி இருக்கிறார்? கைகொடுத்து இருக்கிறார் என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் மறைந்த ராஜேஷ் பற்றியும் ஒரு தகவல் வந்துள்ளது. அதுபற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க. ராஜேஷூக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது ராஜேஷ் அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் நடனமாடிய சில நடனப்பெண்மணிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு வாரத்துக்கு முன்னால கன்னிப்பருவத்திலே நடனமாடிய அத்தனை நடனப்பெண்மணிகளையும் ஜிஆர்பி ஓட்டலுக்கு அழைத்து அவர்களுக்கு மாபெரும் விருந்து கொடுத்து இருந்தாராம் ராஜேஷ்.
நாங்க எத்தனையோ கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறோம். ஆனா எந்த நடிகரும் இப்படி விருந்து கொடுத்து எங்களைப் பாராட்டியதில்லை என கண்கலங்கினர் அந்த நடனப்பெண்மணிகள். ராஜேஷ் என்ற அந்த அற்புதமான மனிதர் எப்படிப்பட்ட மனிதாபிமானத்துடன் இருந்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்கிறார் சித்ரா லட்சுமணன்.
1979ல் பிஏ.பாலகுரு இயக்கத்தில் கன்னிப்பருவத்திலே படம் வெளியானது. பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தை தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். பாக்கியராஜ் திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ராஜேஷ் நடித்துள்ளார். வடிவுக்கரசி தான் ஜோடி. படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. படத்தின் ஹீரோ ராஜேஷ் ஜல்லிக்கட்டு விளையாட்டில் காயம் பட்டு ஆண்மையை இழந்து விடுகிறான். அவனது மனைவி வடிவுக்கரசி.

அவளைத் தாம்பத்தியத்தில் திருப்திப்படுத்த முடியவில்லை. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறான். அந்த நிலையில் பாக்கியராஜ் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறார். அடுத்து நடப்பது என்ன என்பதுதான் கதை. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.
திடீர் சபலம் மனிதனின் வாழ்க்கையில் எப்படி குரூரத்தை வெளிப்படுத்தும் என்பதை கூறும் விதமாக இருந்த கன்னிப் பருவத்திலே தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளத்தை உருவாக்கி இருந்தது. சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே தேன் சொட்டும் ரகங்கள். ஆவாரம் பூமேனி, பட்டுவண்ண ரோசாவாம், நடைய மாத்து, அடி அம்மாடி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.