பா.ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை, அவர்கள் சந்திக்கும் வலிகளை தங்களின் திரைப்படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.எனவே சாதியை தூக்கிப் பிடிப்பவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கும் இந்த மூன்று இயக்குனர்களையுமே பிடிக்காமல் போய்விட்டது.
எனது இந்த 3 இயக்குனர்களையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறாகவும், வன்மமாகவும் விமர்சித்து வருகிறார்கள். மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட தனது சமூக மக்கள் சந்தித்த வலிகளை, பிரச்சனைகளை பேசினால் இவர் ‘அமுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க’ எந்த படமெடுத்து வருகிறார் என வன்மத்தை கக்கி வருகிறார்கள்.
இந்த விமர்சனங்களை பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகிய மூவரும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் பைசன் படம் வெளியானபோது அவர் செய்தியாளர்களை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் ‘ஏன் இது போன்ற படங்களையே எடுக்கிறீர்கள்?. இது சாதி பிரச்சனையை தூண்டி விடாதா?’ என்று தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் கடுப்பான மாரி ‘என் படத்தை பார்த்து எங்கும் எதுவும் நடக்கவில்லை. நான் இந்திய பிரஜை.. என் சமூக மக்கள் சந்தித்த வலியை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இங்கு சட்டம் இருக்கிறது.. அரசாங்கம் இருக்கிறது. சென்சார் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் உட்பட்டுதான் நான் படங்களை எடுக்கிறேன். என் படங்களை பாராட்டி விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் என் படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்’ என பதில் சொல்லியிருந்தார்.
இந்நிலையில், பைசன் பட வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் ‘முதலில் என்னை திட்டினார்கள். அதன்பின் மாரி வந்தான். அவனையும் திட்டினார்கள். அதன்பின் வெற்றிமாறன் வந்தார். இப்போது எங்கள் மூவரையும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றிமாறன் 3 வருடங்களுக்கு ஒரு படம்தான் எடுக்கிறார். மாரி செல்வராஜ் இதுவரை 5 படங்களைத்தான் எடுத்திருக்கிறான். கடந்த 2 வருடங்களில் 600 படங்கள் வெளிவந்திருக்கும். எங்கள் படங்களைத் தவிர மற்ற படங்களை எல்லாம் ஓடிவிட்டதா? அவர்களையெல்லாம் ஏன் ரசிகர்கள் ஓட வைக்கவில்லை?. நாங்கள் சாதிய படங்களை எடுத்து சினிமாவை அழிக்கிறோம் என்றால் மற்ற இயக்குனர்கள் என்ன செய்கிறார்கள்? சினிமாவின் தரத்தை உயர்த்த அவர்களுக்கு எந்த பங்கும் இல்லையா?.. அதேபோல் ‘அமுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க’ என நக்கலடிடுக்கிறார்கள்.. அது எவ்வளவு ஒரு மோசமான ஒரு வார்த்தை’ என பொங்கி இருக்கிறார்.