Idli kadai : நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி முதல் காட்சி என்றாலும் வெளிநாடுகளில் அதிகாலை 6 மணிக்கு இப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் படம் எப்படி இருக்கிறது என்பதை டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த படத்திற்கு 4.25 மதிப்பெண் கொடுத்துள்ள ஒருவர் ‘படம் முழுவதும் முருகனின் இட்லி கடையை சுற்றி நிகழ்கிறது. தனுஷ் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் முன் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. அந்த காட்சிகளில் தனுஷ் பேசும் வசனங்கள் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப் போகிறது.
கிராமத்து வாழ்க்கை, வன்முறை இல்லாத அமைதியான வாழ்க்கை, கலாச்சாரத்தையும், பாரம்பரியம் தூக்கிப் பிடிப்பது, பெற்றோர்களை அரவணைப்பதோடு அவர்களின் கனவுகளுக்காக தியாகம் செய்வது, வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற எலி வேட்டையை தவிர்த்து விட்டு மனசுக்கு திருப்தியான வாழ்க்கை வாழ்வது என பல விஷயங்களை இப்படம் பேசுகிறது’ என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம். குறிப்பாக கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். எளிமையான கதை, திரைக்கதை. ஆனால் அதை இயக்குனர் தனுஷ் சிறப்பான முறையில் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.உணர்வுபூர்வமான காட்சிகள், காமெடி, காதல், ஆக்சன் கலந்த திரைப்படம் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் படத்தின் பெரிய ஹைலைட். தனுஷின் நடிப்பும் ஜிவி பிரகாஷின் இசை, குறிப்பாக ‘எப்பாட்டன் சாமி’ பாடல் இதயத்தை தொடுகிறது’ என்று ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த படத்தில் பன்ச் வசனம் இல்லை, ஓபனிங் சாங் இல்லை, எந்த ஹீரோ பில்டப்பும் இல்லை. படம் மெதுவாக தொடங்கி அழகாக நகர்கிறது. ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ள கருப்பசாமி பாடல் பல விஷயங்களை சொல்கிறது. ஷாலினி பாண்டேவுக்கு பெரிய வேலை இல்லை. நித்யா மேனன் மனதை கவர்கிறார். வில்லனாக அருண் விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் இட்லி கடை சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
