TVK Vijay: தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் சென்றிருந்த போது அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. இதையடுத்து விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் ‘இதற்கெல்லாம் முழு பொறுப்பு விஜய்தான்’ என அவரை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளும், விஜயின் ரசிகர்களும் ‘இது முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி, வேண்டுமென்றே கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பலரையும் கொன்று விட்டார்கள்’ என்று அவர்கள் புகார் கூறி வருகிறார்கள். அதிலும் சிலர் விஜய் கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.
ஒருபக்கம் கரூர் சம்பவம் பற்றி விசாரணைக் குழு அல்லது சிபிஐ அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் விஜய். இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் இன்று இரவுக்குள் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியிருப்பதாக தற்போது செய்திகள் வெளி வந்திருக்கிறது.
கரூர் ஏ.டி.எஸ்.பி பிரேமானந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் இதற்கான பணியில் இறங்கி இருக்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த் மட்டுமில்லாமல் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகிய இருவர் மீதும் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கொலைக்கு சமமில்லாத குற்றமற்ற கொலைக்கான பிரிவு BNS 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி BNS 110, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை BNS பிரிவு 125, பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை BNS பிரிவு 223, பொதுச் சொத்துக்களுக்கு தேசம் விளைவித்தல் TNPPDL BNS சட்டப்பிரிவு 3 என அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இன்று இரவுக்குள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல்குமார், மதியழகன் ஆகிய மூவரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
