நகைச்சுவை புலி சிங்கமுத்து :
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சிங்கமுத்து. வடிவேலுவுடன் இவர் செய்யும் காமெடி சேட்டைகள் எல்லாம் இன்றும் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். வடிவேலுக்கும் சிங்கமுத்துவுக்கும் on screen chemistry-யை தாண்டி திரைக்குப் பின்னாலும் அண்ணன் தம்பி போல் பழகி வந்தனர்.
அப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வடிவேலு சிங்கமுத்து மீது மோசடி புகார் ஒன்றை காவல் நிலையத்தில் வழங்கினார். அன்று ஏற்பட்ட மோதல் இன்று வரை புகைந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒருப்பக்கம் வடிவேலு திமுக ஆதரவாக செயல்பட்டு வந்தாலும் மறுப்பக்கம் சிங்கமுத்து அதிமுக பேச்சாளராக பயணித்து வந்தார். கட்சியில் தான் இருந்தவரை ஜெயலலிதா அம்மாவுடனான நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் சிங்கமுத்து. அப்பொழுது விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் அந்த சூழலில் ஜெயலலிதா அவரை எப்படி அணுகினார் என்பதை சிங்கமுத்து கூறியிருக்கிறார்.
விஜயகாந்தை புகழ வேண்டாம் :
விஜயகாந்த் உடன் வானத்தைப்போல, ஏழை ஜாதி போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் ஒரு தனிப்பட்ட நெருக்கம் இருந்தது. அம்மாவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்தபோது பிரச்சாரக் கூட்டங்களில் அவரை பயங்கரமாக தூக்கி பேசுவேன். இந்த விஷயம் ஜெயலலிதா அம்மாவுக்கு தெரிந்து எனக்கு போன் செய்தார்கள் ’இவ்வளவு தூக்கி பேச வேண்டாம் கொஞ்சம் அடக்கி வாசிங்க’ என்று சொன்னார்.
இருந்தாலும் அவரை எந்த இடங்களிலும் விட்டுக் கொடுக்காமல் தூக்கி பேசினேன். அதன் பிறகு அவரை இறக்கிப் பேச வேண்டிய சூழ்நிலை வந்தது. காரணம் அவர் அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். அதனால் அவரை பிரச்சாரக் கூட்டங்களில் இறக்கிப் பேசினேன். அடிப்படையில் விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர். அவருடைய இழப்பு பெரிய இழப்புதான்.
எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த்தான் :
விஜயகாந்த் போல இன்னொரு நடிகன் யாரும் வர முடியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு தர்ம குணத்தை விஜயகாந்த்திடம் பார்த்தேன். அரசியலைப் பொறுத்தவரை ஒருத்தரை தூக்கிப் பேசுவது மற்றவரை இறக்கிப் பேசுவது எல்லாம் இங்கு சகஜம். அதனால் விஜயகாந்த் அதை எல்லாம் அப்பொழுது பெரிதாக எடுத்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
குழந்தைத்தனமாகவும் இருப்பார் அதேபோல சீரியஸாகவும் நடந்து கொள்வார். நான் மட்டுமில்லை எந்த கட்சியாக இருந்தாலும் விஜயகாந்தை குறை சொல்ல முடியாது மனரீதியாக உள்ள பாசம் எப்போதும் இருக்கும். வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் சண்டை ஏற்பட்டபோது ’வடிவேலு சும்மா எதையாவது சொல்லிட்டு கிடப்பான் நீங்க கண்டுக்கிடாதீங்க அண்ணே’ அப்படின்னு என்கிட்ட சொல்லுவாரு.
வடிவேலு ஏற்படுத்திய ஆத்திரம் :
என்னை ஒருநாள் ஜெயிலில் உட்கார வைத்து விட்டான் அந்த வடிவேலு. 10 வருடம் அம்மா ஆட்சியில் இருந்தபோது நான் சொன்னால் அவனை தூக்கி ஜெயிலில் போட்டு இருப்பார்கள். ஆனால் நான் எதையுமே செய்யவில்லை. பல பேர் என்னிடம் வந்து வடிவேலு மீது பெட்டிஷன் கொடுக்க சொன்னார்கள். நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
காரணம் வடிவேலு மாதிரி நான் கிடையாது. எனக்கு செல்வாக்கு இருந்தும் நான் அதை தவறாக பயன்படுத்தி கிடையாது. வடிவேலு நல்ல நடிகர் இன்னும் அவர் நன்றாக நடிக்க வேண்டும் நல்லா இருக்கணும் அவ்வளவுதான்.
