
Cinema News
விஜய்க்கு எதிராக சூர்யாவை களமிறக்க திட்டமா? அரசியலில் என்ன நடக்கிறது?..
Actor Surya: எம்.ஜி.ஆருக்கு பின் அரசியலுக்கு வந்த தமிழ் சினிமா நடிகர்களில் விஜயகாந்தை தவிர வேறு யாரும் பெரிய லெவலுக்கு போகவில்லை. விஜயகாந்த் கூட எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர் என்பதோடு நின்று விட்டார். அதற்கு மேல் போகவிடாமல் அவரின் உடல்நிலை தடுத்துவிட்டது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக கூறி பின் கள நிலவரங்களை தெரிந்து கொண்டு அதிலிருந்து பின் வாங்கினார்.
ரஜினிக்குப் பின் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து அரசியல் கட்சியும் துவங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் விஜய் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், விஜயை சமாளிக்க அவருக்கு எதிராக சூர்யாவை களம் இருக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் உலா வருகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் லாஜிக் என்னவெனில் கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருக்கிறது. எனவே அந்த மண்டலத்தை சேர்ந்த சூர்யாவை அங்கு களம் இறக்கினால் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என திமுக நம்புவதாக பலரும் பேசி வருகிறார்கள் குறிப்பாக திமுகவையும், சூர்யாவையும் பிடிக்காத பலரும் பேசி வருகிறார்கள்.

ஆனால் யோசித்துப் பார்த்தால் இதில் எந்த உண்மையும் இல்லை என்பது புரியும். இப்போது அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் சூர்யாவுக்கு இல்லை. பணம், பேர், புகழ் என மூன்றையுமே அவர் சம்பாதித்திருக்கிறார். அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு சூர்யாவின் இமேஜை எங்கோ கொண்டு சென்றிருக்கிறது. பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
அதேநேரம் அவர் தனது ரசிகர்களை சந்திக்கும் போது ‘நம்பிக்கையுடன் இருங்கள்.. எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும்.. எனக்கும் சில கனவுகள் இருக்கிறது’ என சொல்லி இருக்கிறார். எனவே எதிர்காலத்தில் சூர்யா அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படியே அவர் அரசியலுக்கு வந்தாலும் இப்போதுள்ள திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் அவர் கண்டிப்பாக இணைய மாட்டார். தனி கட்சி துவங்கவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
சினிமாவில் ஒன்னும் அவர் மார்க்கெட் போன நடிகர் இல்லை. இப்போதும் அவருக்கு 60 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஒருபக்கம் சூர்யா இல்லையெனில் சிவக்குமார், கார்த்தி, ஜோதிகா என யாரேனும் ஒருவரை கொங்கு மண்டலத்தில் நிறுத்துவார்கள் என சிலர் பேசுகிறார்கள். அதிலும் உண்மை இல்லை, அவர்கள் யாருக்கும் இப்போது அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை.

சூர்யாவுக்கு கள நிலவரங்கள் தெரியும். நல்ல அரசியல் அறிவு உள்ளவர்தான். நாட்டில் நடக்கும் எல்லா விஷயத்தையும் அவர் கவனித்து வருகிறார். அதனால்தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்த போது அதை கடுமையாக எதிர்த்து டிவிட்டரில் பதிவிட்டார். அது தொடர்பாக கருத்துக்களை சொல்லுங்கள் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து இமெயில் ஐடி எல்லாம் கொடுத்தார். நீட் தேர்வுக்கு எதிராகவும் பேசினார்.
அதேநேரம் சூர்யா அதிமுக ஆட்சியில் இருக்கும் போது மட்டுமே மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர் எதையும் பேசுவதில்லை என்கிற விமர்சனமும் அவர் மீது உண்டு. ஆனால் இதற்கு சூர்யா இதுவரை பதில் சொல்லவில்லை.
திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலுவின் சினிமா வாழ்கை என்னவானது என்பது சூர்யாவுக்கு தெரியும். வடிவேலுவை பார்க்க பல லட்சம் பேர் வந்தாலும் அவையெல்லாம் ஓட்டாக மாறவில்லை. சூர்யா அரசியலுக்கு வந்தாலும் இதுதான் நடக்கும் என அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே உலா வரும் செய்திகள் போல அரசியலுக்கு போகும் எண்ணமெல்லாம் சூர்யாவுக்கு இல்லவே இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.