நடிகர் அஜித்குமாருக்கு சிறு வயது முதலே கார் மற்றும் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உண்டு. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கூட தன் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பைக் பட்டறைல்தான் அவர் அதிக நேரம் செலவழித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க துவங்கியது கூட பைக் வாங்குவதற்கும், பைக் ரேஸ்களில் கலந்து கொள்வதற்கும்தான் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
சினிமாவில் நடித்து வந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து பைக் ரேஸ்களில் கலந்து கொண்டார். இதனால் விபத்துகளில் சிக்கி அவரின் முதுகில் பலமுறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் கார் ரேஸ்களிலும் கலந்து கொள்ள துவங்கினார். ஆனால் திருமணத்திற்கு பின் அவர் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளவில்லை ஆனால், சமீப காலமாக அஜித் தொடர்ந்து கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில்தான் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்து கார் ரேசை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட F1 திரைப்படம் போல ஒரு கார் ரேஸ் சம்மந்தப்பட்ட கதையில் நாமும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அஜித்துக்கு வந்திருக்கிறதாம். ஏற்கனவே ஒரு பேட்டியில் இதை அஜித்தே கூறியிருந்தார்.
அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனை அழைத்து கார் ரேஸ் தொடர்பாக ஒரு கதையை உருவாக்க சொல்லி இருக்கிறார் அஜித். எல்லாம் சரியாக அமைந்தால் கார் ரேஸ் தொடர்பான ஒரு படத்தில் அஜித் நடிப்பது உறுதி.
