
Cinema News
கேப்டன் பிரபாகரன் பார்த்து கதறி அழுத பிரேமலதா, விஜய பிரபாகரன்!.. எமோஷனல் மொமண்ட்..
Captain prabkaran: ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்து அவரின் 100வது படமாக வெளிவந்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். பிரேமலதாவை திருமணம் செய்து கொண்ட பின் வெளியான விஜயகாந்தின் படம் இது என்பதால் இந்த படம் பிரேமலதாவுக்கு மிகவும் ஸ்பெஷல். இன்னும் சொல்லப்போனால் இந்த படம் ரிலீஸ் ஆன போதுதான் விஜயகாந்துக்கு மகன் பிறந்தார். அதனால்தான் அவருக்கு பிரபாகரன் என பெயர் வைத்தார்.
அசத்தலான ஆக்சன் காட்சிகளைக் கொண்ட கேப்டன் பிரபாகரன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. விஜயகாந்த் எவ்வளவு ஆக்சன் படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கும் ஸ்பெஷல்தான். ஏனெனில் அசத்தலான வசனங்கள், அசத்தலான சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான காட்சிகள் என இப்படத்தை சிறப்பாக உருவாக்கி இருந்தார் ஆர் கே செல்வமணி.
முதல் ரிலீஸில் மட்டுமல்ல. அதன்பின் சிலமுறை இப்படம் பல தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை குவித்தது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மன்சூர் அலிகான் இந்த படத்தில்தான் வில்லனாக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் இப்போதும் 80,90 கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது.
இந்நிலையில்தான் கேப்டன் பிரபாகரன் படம் இன்று மீண்டும் புதுப்பொலிவுடன் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இப்படம் இன்று காலை திரையிடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் இப்படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள். தமிழகத்தின் சென்னை உள்பட தமிழகத்தின் பல ஊர்களிலும் இன்று காலை காட்சி ஹவுஸ்புல் ஆனது.

இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் அவரின் மகன் விஜய பிரபாகரனும் கடலூரில் உள்ள ஒரு தியேட்டரில் கட்சி நிர்வாகிகளுடன் பார்த்தார்கள். படத்தை மிகவும் ரசித்து பார்த்து அவர்கள் ஒரு கட்டத்தில் எமோஷனலாகி அழத் துவங்கிவிட்டனர். பிரேமலதா கையை தட்டியவாறு அழுது கொண்டே இருந்தார். விஜய பிரபாகரனும் விசில் அடித்துக் கொண்டே அழுதார்.
கடைசி காலத்தில் விஜயகாந்த் பல வருடங்கள் பேச முடியாமலும், நடக்க முடியாமலும் வீட்டில் இருந்ததை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் அசத்தலாக நடித்ததும், அவர் பேசிய வசனங்களும் அவர்களை எமோஷனல் ஆக்கிவிட்டது என்று கருதப்படுகிறது.