
Box Office
விஜயகாந்த் இப்பவும் மாஸ்!.. கில்லி வசூலை நெருங்கும் கேப்டன் பிரபாகரன்.. அடி தூள்!..
Captain Prabhakaran: ரஜினி ரசிகர்களுக்கு பாட்ஷா எப்படியோ அதுபோல விஜயகாந்த் ரசிகர்களுக்கு கேப்டன் பிரபாகரன் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் வருடம் வெளியான கேப்டன் பிரபாகரன் விஜயகாந்தின் நூறாவது படமாக அமைந்தது. சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், ரூபினி உள்ளிட்ட பலரும் முக்கிய இடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், அனல் பறக்கும் வசனங்களும் இடம் பெற்றிருந்தது.
படம் துவங்கி 25 நிமிடங்களுக்கு பின்னரே விஜயகாந்த் வந்தாலும் அசத்தியிருப்பார். இந்த படத்தில் வில்லனாக அறிமுகமான மன்சூர் அலிகானின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. முதல் படத்திலேயே ஸ்கோர் செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மன்சூர் அலிகான். சந்தன கடத்தல் வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லனாக அமைத்து இப்படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கி கேரளாவை ஒட்டியுள்ள காடுகளில் படத்தை படமாக்கி தமிழில் ஒரு ஆங்கில படம் போல இயக்கியிருந்தார் ஆர்.கே செல்வமணி.

அப்போதே இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பல தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கும் மேலும் ஓடியது. சில திரையரங்குகளில் 250 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக அமைந்தது.
இந்நிலையில்தான் கேப்டன் பிரபாகரன் படம் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 4k தொழில்நுட்பத்துடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியாகி 13 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 27.06 கோடி கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது.
34 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் இப்போது 25 கோடி வசூலை தாண்டி இருப்பது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதும் தான் ஒரு வசூல் மன்னன் என காட்டியிருக்கிறார் மறைந்த நடிகர் விஜயகாந்த். நடிகர் விஜய்க்கு முக்கிய படமாக அமைந்த கில்லி 2024 ஆம் வருடம் ரீரிலீஸ் செய்யப்பட்டு 30 கோடி வரை வசூல் செய்தது. அந்த வசூலை கேப்டன் பிரபாகரன் தற்போது நெருங்கி விட்டது. கண்டிப்பாக இன்னும் இரண்டு நாட்களில் இப்படம் கில்லியின் ரீ-ரிலீஸ் வசூலை தாண்டும் என்றே கணிக்கப்படுகிறது.