நடிகர் ரஜினி தற்போது இந்திய சினிமாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் நடிக்க வந்தபோது பல சோதனைகளை சந்தித்திருக்கிறார். பல அவமானங்களையும் தாண்டித்தான் அவர் வாய்ப்புகளை பெற்றார். நடிகனாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் படித்தார் ரஜினி. அப்போது அங்கு ஒருமுறை இயக்குனர் பாலச்சந்தர் வர அவரின் அறிமுகம் ரஜினி கிடைத்தது. அதைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.
ரஜினிக்கு கன்னடம், மராத்திமொழி மட்டுமே தெரியும். எனவே, தமிழ் பேசி நடிப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. எனவே தெளிவாகவும், சரளமாகவும் தமிழ் பேச முடியாமல் திணறினார். இதனாலே தனக்கு சினிமா வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்றும் பயந்தார். தட்டு தடுமாறி தமிழ் பேசித்தான் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார் ரஜினி என்பது அவருடன் ஆரம்ப காலத்தில் நடித்த நடிகர்களுக்கு தெரியும். தமிழை சரியாக பேச முடியாததாலும், ஒருபக்கம் இங்கு மங்கும் மாறி மாறி ஓடி நடித்துக் கொண்டிருந்ததாலும் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு போய்விட போய்விடலாம் என ரஜினி முடிவெடுத்த சம்பவம் எல்லாம் நடந்தது.
ரஜினிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட நடிகர் சிவக்குமார் ‘1976-ல் ரஜினியுடன் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்தேன். ஷூட்டிங் முடிந்து அவரை வீட்டுக்கு சாப்பிட கூட்டி சென்றேன். அப்போது ‘என்னால முடியல சார்.. சரியா தமிழ் பேசி நடிக்க முடியல.. இன்னைக்கு சூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கும்போது ஹைதராபாத்தில் இருந்து பாலச்சந்தர் கால் பண்ணி அங்க ஒரு தெலுங்கு படத்துல நடிக்க கூப்பிடுகிறார்.. பேசாமல் நடிப்பை விட்டுவிடலாம் என நினைக்கிறேன்’ என்றெல்லாம் புலம்பினார்.

‘ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்.. எல்லாம் பழகிவிடும்.. நடிப்பை விடாதீர்கள்’ என்று அவருக்கு ஆலோசனை சொன்னேன். பேருந்தில் கண்டக்டராக வேலை செய்த ஒருவன் ஆசிய கண்டத்திலேயே பெரிய நடிகராக மாறி இருக்கிறார்.. அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என அதில் பேசியிருக்கிறார் சிவக்குமார்.




