சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு இன்று காலை முதலே அவருக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். நடிகர் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
அதேபோல், ரஜினி இப்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிக்காக ஒரு பிரத்யோக வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்தது. அதேபோல், நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டது.
இந்நிலையில்தான், மேயாத மான், ஆடை, குளு குளு ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் ரஜினி பல வருடங்களுக்கு முன்பு ரமண மகரிஷி பற்றி பேசிய வீடியோவை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார். ரத்னகுமார் அடிப்படையில் ஒரு விஜய் ரசிகர். லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் இவர்., லோகேஷ் விஜய்யை மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கிய போது அந்த படத்தில் ரத்னகுமாரும் வேலை செய்தார்.

இன்னும் சொல்லப்போனால் லியோ படத்தின் 2ம் பாதியை இயக்கியதே ரத்னகுமார்தான் என சொல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஜெயிலர் பட விழாவில் ‘கழுகு மேல பறக்கும். காக்கா அதை பாத்து மேல பறக்க முயற்சி பண்ணும். ஆனால், அதால முடியாது’ என ரஜினி சொன்னபோது அது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. விஜயைத்தான் அவர் காக்கா என்ன சொல்கிறார் என அவர்கள் கோபப்பட்டார்கள். அதுதான் ரஜினி – விஜய் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரத்னகுமார் ‘கழுகு எவ்வளவு உயர பிறந்தாலும் ஒரு நாள் கீழே வந்துதான் ஆகணும்’ என்று பேசினார். இது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தியது. இந்நிலையில்தான் இன்று ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார் ரத்னகுமார். இதையடுத்து ‘நீ நடிக்காத.. நீ விஜய் ரசிகன்னு எங்களுக்கு தெரியும்’ என்று ரஜினி ரசிகர்கள் அவரின் கமெண்ட் பாக்ஸில் போய் திட்டி வருகிறார்கள்.
