Guna: சந்தன பாரதி இயக்கத்தில் கமலஹாசன் நடித்த 1991ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் குணா
. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனிடம் மனநல பாதிக்கப்பட்ட மற்றொருவர் ‘நீ சிவன்.. உன்னை தேடி அபிராமி வருவாள்.. அவளை நீ திருமணம் செய்து கொள்’ என்று சொல்ல அதையே நம்பி கோவிலில் திருடச் செல்லும்போது கதாநாயகியை பார்க்கும் கமல் அவளையே தனது துணையாக நினைத்து அவரை கடத்திச் சென்று மலையில் வைத்துக் கொள்வார். அதன்பின் அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தில் வழக்கம் போல் கமல் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதாநாயகியாக ரோகிணி என்பவர் நடித்திருந்தார். இந்த படம் பலரையும் அழ வைத்தது. உருக வைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் 5 பாடல்களும் மனதை கவர்ந்தது. குறிப்பாக ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் இப்போதும் இளசுகளால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும், உன்னை நான் அறிவேன் பாடலும் மனதை தாலாட்டியது. கமல் சிறப்பாக நடித்திருந்தும், சிறந்த படம் என்கிற பாராட்டைப் பெற்றும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில்தான் கமலின் நண்பரும் நடிகருமான ராதாரவி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘குணா படத்தை தியேட்டரில் பார்த்தேன்.. படம் முடிந்ததும் 5 நிமிடம் நான் எந்திரிக்கவே இல்லை.. இப்படி நடிச்சிட்டானே இந்த மனுஷன் என்று ஃபீல் செய்தேன்.. அழுகையும் வந்தது.. நேராக கமலின் வீட்டுக்கு சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி விட்டு படத்தை பாராட்டினேன்.
அதே நேரம் ‘இந்த படத்தை நீ இப்போது ஏன் எடுத்தாய்?.. 20 வருடங்கள் கழித்துதான் இந்த படம் மக்களுக்கு புரியும்’ என்று சொன்னேன் என்று பேசி இருக்கிறார்.
