நடிகர் விஜயின் அம்மா சோபாவின் உடன் பிறந்த சகோதரர் எஸ்.என்.சுரேந்தர். 80களில் நடிகர், நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் என கோலிவுட்டில் பிஸியாக இருந்தவர் இவர். பல திரைப்படங்களில் இவர் பாடியிருக்கிறார். குறிப்பாக 80களில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த மைக் மோகனுக்கு திரையில் பின்னணி குரல் கொடுத்தவர் சுரேந்தர்தான்.
ஒரு கட்டத்தில் இவருக்கும் மோகனுக்கும் மனக்கசப்பு ஏற்பட ‘இனிமேல் மோகனுக்கு நான் குரல் கொடுக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டார் சுரேந்தர். அதன்பின் மோகன் சொந்த குரலில் பேசினார். ஆனால், அது எடுபடவில்லை. அப்போதுதான் மோகனின் சரிவும் துவங்கியது. சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத போது நிறைய இசைக்கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தார் சுரேந்தர். விஜய்க்கும் சில பாடல்களை பாடியிருக்கிறார்.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் ‘உங்களின் மருமகன் விஜய் இவ்வளவு பெரிய நடிகராகி விட்டாரே’ என்று கேட்டதற்கு ‘அப்படியா?.. சந்தோசம்’ என்றார் சுரேந்தர். ‘ஏன் உங்களுக்கு அதில் மகிழ்ச்சி இல்லையா?’ என்று கேட்டதற்கு ‘எல்லாரும் உயரம் போகணும்தான்.. ஆனால் வளர்த்துவிட்டவர்களை மறக்கக் கூடாது. பழசையும் நினைச்சு பாக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார் சுரேந்தர்.
விஜய்க்கும், அவரின் தாய்மாமன் சுரேந்தருக்கும் இடையே பல வருடங்களாகவே பேச்சுவார்த்தை இல்லை. அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்றெல்லாம் தெரியவில்லை.. அதேநேரம் சுரேந்தரின் குரலில் வருத்தமும்.. ஏமாற்றமும்.. பல நாட்கள் சொல்லாமல் வைத்திருந்த மனக்கசப்பும் வெளிப்பட்டது.
