விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவைப் போலவே நடிக்கும் ஆர்வம் ஏற்பட மகனை சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் கேப்டன் விஜயகாந்த்.
2015ம் வருடம் வெளியான அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் 2018ம் வருடம் அவருடைய நடிப்பில் மதுர வீரன் என்கிற படம் வெளியானது.
அதன்பின் ‘தமிழன் என்று சொல்’ என்கிற படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சண்முக பாண்டியனோடு விஜயகாந்தும் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அந்த படமே டிராப்பானது. அதன்பின் பல வருடங்கள் கழித்து சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் படம் வெளியானது.

இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்கிற படத்தில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். இந்த படத்தில் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் என்பதால் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொம்பு சீவு படத்தை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்தை கொம்பு சீவி படத்தை தயாரித்த எஸ் பிச்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. மித்ரன் ஜவஹர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பதால் கண்டிப்பாக இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
