விஜயகாந்த்:
தமிழ் சினிமா உலகில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது கேப்டன் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மக்களுக்கு பிடித்தமான ஒரு மனிதராக தான் இருந்து வந்தார். 150 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமா உலகில் வெற்றி வாகை சூடிய ஒரு நடிகர். அதேபோல அரசியலிலும் அவர் ஆதிக்கம் செலுத்திய வரை மக்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும், மக்களுக்காகவே வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றியவர்.
அவரது மறைவு இன்றுவரை தமிழக மக்களுக்கும் சரி சினிமா ரசிகர்களுக்கும் சரி ஒரு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய மகன் சண்முக பாண்டியன் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கொம்புசீவி. வரும் 19ஆம் தேதி அந்த படம் வெளியாக இருக்கின்றது. படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து சரத்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தந்தை மகன் கேரக்டரில் இருவரும் நடிக்கிறார்களா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பிரேமலதா விஜயகாந்த் மாமனுக்கும் மச்சானுக்கும் இடையே இருக்கும் அந்த கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது எனக் கூறியதன் மூலம் மாமன் மருமகன் கதாபாத்திரத்தில் இருவரும் நடிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ரமணா வெற்றி:
இந்த நிலையில் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது வந்திருந்த அனைத்து சினிமா பிரபலங்களும் விஜயகாந்தை பற்றி பேசாமல் மேடையை விட்டு இறங்கவில்லை. ஒவ்வொருவரும் விஜயகாந்துடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ் விஜயகாந்த் பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். ராஜேஷ் இயக்குனர் பொன்ராம் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள். ரமணா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்த போது விஜயகாந்த் அந்த சமயம் மிகவும் பிஸியாக இருந்திருக்கிறார்.
அப்பொழுது எஸ்.கே சந்திரசேகர் ராஜேஷையும் பொன்ராமையும் அழைத்து தன்னிடம் ஒரு ஆக்சன் சம்பந்தப்பட்ட ஒரு கதை இருப்பதாகவும் அதன் பவுண்டடு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுமாறும் இவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். ராஜேஷ், பொன் ராமன் எஸ்.ஏ சந்திரசேகர் சொன்னதை போல ஒரு பவுண்டடு ஸ்கிரிப்ட் ரெடி செய்து எஸ்.ஏ சந்திரசேகரிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்த கதையில் யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என சந்திரசேகர் கேட்க, இருவரும் பல நடிகர்களின் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால் சந்திரசேகர் இந்த கதைக்கு விஜயகாந்த் பொருத்தமாக இருப்பார் என்று சொல்ல, அதற்கு ராஜேஷ் விஜயகாந்தா? அவர் இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறார்.
கண்கலங்கி அழுத சந்திரசேகர்
அவர் நடிப்பாரா என்று கேட்டிருக்கிறார். நான் கேட்டு பார்க்கிறேன் என சந்திரசேகர் உடனே விஜயகாந்துக்கு தொலைபேசி மூலமாக அழைத்திருக்கிறார். அப்போது விஜயகாந்த் வெளியூர் படப்பிடிப்பில் இருந்தாலும், என்ன சார் நான் நேரில் வரணுமா சொல்லுங்க. படப்பிடிப்பை அப்படியே விட்டுவிட்டு கிளம்பி வருகிறேன்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சந்திரசேகர், இல்லை இல்லை என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

உங்களுக்கு அது பொருத்தமாக இருக்கும் என கூற எப்ப சார் ஷூட்டிங் என விஜயகாந்த் கேட்டிருக்கிறார். நீங்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டு சொல்லுங்கள், அதன் பிறகு பேசலாம் என கூறிவிட்டு போனை வைத்து விட்டாராம் சந்திரசேகர். ஆனால் கேப்டன் அப்படி சொன்னதும் சந்திரசேகர், ‘ என்ன மனுஷன்யா இவரு? இன்னும் அவர் உயர போக வேண்டும். மென்மேலும் வளர வேண்டும்’ என சொல்லிக்கொண்டே கண் கலங்கி அழுது விட்டாராம். இதை ராஜேஷ் அந்த மேடையில் கூறினார்.
