பேருந்து நடத்துனராக இருந்து நடிகராக மாறியவர் ரஜினிகாந்த். நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் படித்து, இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்தில் ஹீரோவாக கமல் நடித்திருந்தார். அதாவது, ரஜினி சின்ன வேடத்தில் அறிமுகமான படத்தில் கமல் பிரபல ஹீரோவாக இருந்தார். ஆனால், சூப்பர்ஸ்டார் ஆனது ரஜினிதான். கமல் இல்லை.
துவக்கத்தில் கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அவரின் நண்பர் அல்லது வில்லனாக நடித்து வந்தார் ரஜினி. ஒருகட்டத்தில் இருவரும் பேசி பிரிந்து தனித்தனியாக நடிக்க துவங்கி தங்களுக்கென தனி பாதையில் பயணித்தனர். ரஜினியின் படங்கள் வசூலை அள்ளியது. கமல் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நடிப்புக்கு தீனி போடும் கதைகளில் நடித்தார். ஆனால், ரஜினியோ அந்த பக்கம் போகவே இல்லை. மகேந்திரன் இயக்கத்தில் மட்டும் சில படங்கள் நடித்தார்.
இப்போதும் ரஜினி ஆச்சர்யமாக பார்க்கும் நடிகராக கமல் இருக்கிறார். கமலை போல என்னால் நடிக்க முடியாது. என்னை விட பல மடங்கு அவர் சிறந்த நடிகர் என ரஜினி பல மேடைகளில் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். கமலின் அபூர்வ சகோதரர்கள், நாயகன் போன்ற படங்களை பார்த்துவிட்டு தூங்காமல் இருந்தவர்தான் ரஜினி.
ஆனால், இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலமாக ரஜினி இருக்கிறார். இப்போதும் ஹீரோவாக கலக்கி வருகிறார். கமலை விட ரஜினியின் சம்பளமும் அதிகம். கமலை விட ரஜினிக்கு ரசிகர்களும் அதிகம். இத்தனைக்கும் கமல் செய்தது போல எந்த ஒரு பரிசோதனை முயற்சியையும் ரஜினி செய்து பார்த்ததே இல்லை. தன்னுடைய ரசிகர்களுக்கான படங்களில் மட்டுமே ரஜினி நடித்தார்.
இந்நிலையில்தான், நடிகர் சிவக்குமார் விழா ஒன்றில் பேசியபோது ‘16 வயதினிலே படத்துல கோவணத்த கட்டிக்கிட்டு கமல்ஹாசன் மாசக்கணக்குல விழுந்து விழுந்து நடிச்சான். ஆனா, வெறும் முனே நாளு கால்ஷீட்ல நடிச்சான் ரஜினி. பரட்டைன்னு தியேட்டர்ல பேர் போட்டதும் கொண்டாடுறானுங்க.. ரஜினிக்கு விதியிலேயே எழுதி இருக்கு.. எந்த கொம்பனாலும் அத தடுக்க முடியாது’ என பேசியிருக்கிறார்.
