சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் 10 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் களமிறங்கியவர் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
. அதன்பின் சமுத்திரக்கனியுடன் இணைந்து மதுர வீரன் என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் பேசப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு படைத்தலைவன் என்கிற படமும் வெளியானது. என்ன காரணமோ அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.
எனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் ஒன்றரை கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
சண்முக பாண்டியனின் மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்த படத்திற்கு நல்ல வசூல் இருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சண்முக பாண்டியன் ஒரு முக்கிய தகவலை சொல்லி இருக்கிறார்.

சசிக்குமார் சார் குற்றப்பரம்பரை நாவலை வெப்சீரியஸாக எடுக்க நினைத்து என்னை தாடி, தலைமுடி வளர்க்க சொன்னார். நானும் பல மாதங்கள் தாடி முடியை வளர்த்து காத்திருந்தேன். ஆனால் தயாரிப்பு நிறுவனம் மாறியதாலும், வேறு சில காரணங்களாலும் அதை எடுக்க முடியவில்லை. நான் அந்த படத்திற்காக தாடி முடி வளத்திருந்தபோது என்னை சில இயக்குனர்கள் அணுகினார்கள்.
நீங்கள் தலைமுடியை வெட்டி தாடியை சேவ் செய்தால் உங்களை வைத்து படம் எடுக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். எனவே இரண்டு பட வாய்ப்புகள் என் கையை விட்டுப் போனது. இதற்காக சசிக்குமார் சார் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.. அவருக்கும் இதில் வருத்தம் இருக்கிறது. நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை’ என்று பேசியிருக்கிறார்.
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை சினிமாவாக எடுக்க இயக்குனர் பாலாதான் முதலில் முயற்சி செய்தார். அதன்பின் அதே கதையை பாரதிராஜா எடுக்க முயன்ற போது பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. இப்போது வரை அந்த நாவலை யாரும் திரைப்படமாக எடுக்கவில்லை. எனவேதான் அதை வெப்சீரியஸாக எடுக்கும் முயற்சியில் சசிக்குமார் இறங்கினார். ஆனால், அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
