தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக கொண்டாடப்பட்ட படம் என்றால் அது விக்ரம் திரைப்படம்தான். அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளியான லியோ மற்றும் கூலி திரைப்படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை. கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. விஜய்,ரஜினி என்ற பெரிய நடிகர்கள் அந்தப் படத்தில் இருந்ததனால்தான் அந்தப் படங்களின் வசூலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தப் படமும் வன்முறை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் எடுத்து வருகிறார்கள். இதற்கிடையில் இரண்டு தினங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் விமான நிலையத்தில் இருப்பது போன்ற வீடியோ வைரலானது. அதன் பின்னணி விவரம் இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.
அதாவது நடிகர் அல்லு அர்ஜூனுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கூடவே லோகேஷின் மேனேஜரும் உடன் சென்றிருக்கிறார்.அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். இது ஏற்கனவே பேசப்பட்ட சந்திப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் லோகேஷ் சொன்ன கதை அல்லு அர்ஜூனுக்கும் பிடித்துவிட்டதாம்.
இந்தப் புராஜக்டை பொறுத்தவரைக்கும் இது மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கும் திட்டத்தில் இருப்பதாக லோகேஷ் விரும்புகிறாராம். லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க போகிறார்களாம். படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுலை மாதத்தில் தொடங்கி அடுத்த வருடம் 2027 ஏப்ரல் மாதத்தில் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் இது லோகேஷின் கனவுப் படமான இரும்புக்கை மாயாவி புராஜக்ட் என்று சொல்லப்படுகிறது. இரும்புக்கை மாயாவி படத்தை முதலில் சூர்யாவை வைத்துதான் லோகேஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது நடக்காமல் போனது. இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் இது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் பற்றிய கதை.
இரும்புக் கை மாயாவி கண்டிப்பாக வரும் என லோகேஷ் அடிக்கடி கூறி வந்த நிலையில் சூர்யா ரசிகர்கள்தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அது அல்லு அர்ஜூன் படமாக மாறியிருக்கிறது.
