நடிகர் சிவக்குமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. இவரின் நிஜப்பெயர் சரவணன். இவரின் பெயரை சூர்யா என மாற்றியது இயக்குனர் வசந்த். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில இயக்குனர்கள் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். கார்மெண்ட்ஸ் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. டிகிரி முடித்துவிட்டு ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியிலும் வேலை செய்து வந்தார்.
இயக்குனர் வசந்த் நேருக்கு நேர் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அதில் நடித்துக் கொண்டிருந்த அஜித் சில காரணங்களால் விலக ஒரு புது ஹீரோவை போட்டு படத்தை ஹிட் கொடுத்து காட்டுகிறேன் என சபதம் போட்ட வசந்த், சிவக்குமாரை சந்தித்து உங்கள் மகனை நான் ஹீரோவாக போட்டு படம் எடுக்க போகிறேன் என சொல்ல அவரிடமும் No சொன்னார் சூர்யா. ஆனால் அவர் தொடர்ந்து கேட்டதால் ஒரு கட்டத்தில் ‘முயற்சி செய்து பார்த்தால் என்ன?’ என்கிற ஆர்வம் சூர்யாவுக்கும் வந்தது. அப்படித்தான் நேருக்கு நேர் படத்தில் நடித்தார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்த போது சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரகுவரன், சூர்யா ஆகியோருக்கு ரயிலில் ஏசி டிக்கெட் போட்டு கொடுத்திருக்கிறார்கள். ஒரே பெட்டியில் மேலே சூர்யாவுக்கும், கீழே ரகுவரனுக்கும் படுக்கை சீட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 9 மணிக்கு படுக்க சென்ற சூர்யா காலை 5 மணிக்கு மேல் எழுந்து கீழே வந்திருக்கிறார். அப்போது ரகுவரன் அமர்ந்து கொண்டிருக்க ‘குட் மார்னிங் சார்’ என சொல்லியிருக்கிறார்.

அப்போது ரகுவரன் ‘நீ எப்படி நிம்மதியா தூங்குற?’ என்று கேட்டிருக்கிறார். அவர் கேட்ட கேள்வி சூர்யாக்கு புரியவில்லை. ‘ஏன் சார்.. என்னாச்சி?’ என பதட்டமாக கேட்டிருக்கிறார். ‘உனக்கு இதுதான் முதல் படம்.. உங்க அப்பா சிவக்குமாருடைய மகன்கிற அடையாளத்தோடதான் நீ சினிமாவுக்கு நடிக்க வந்திருக்க.. ஆனா அந்த அடையாளத்தை எவ்வளவு நாள் வச்சிருப்ப?.. உனக்குனு ஒரு அடையாளம் வேண்டாமா?..
இது உனக்கு முதல் படம்.. நாளைக்கு எப்படி போய் நடிக்க போறோம்கிற பதட்டமே உன்கிட்ட இல்லை.. நிம்மதியா தூங்கிட்ட.. இப்படி இருந்தா சினிமா உன்ன தூக்கி எறிஞ்சிடும்.. பயம் இருக்கணும்.. சின்சியாரிட்டி இருக்கணும்.. உழைக்கணும்.. அப்படி இருந்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும்’ என்று அறிவுரை செய்திருக்கிறார்.
ரகுவரன் சொன்ன அறிவுரைதான் சூர்யாவுக்கு சினிமாவில் கடுமையான உழைப்பை கொடுக்க காரணமாக அமைந்தது. துவக்கத்தில் சாக்லேட் பாயாக நடித்தாலும் ஒரு கட்டத்தில் காக்க காக்க, பிதாமகன், நந்தா, வாரணம் ஆயிரம், சிங்கம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் சூர்யா.
