இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அபூர்வ ராகங்கள் துவங்கி ஜெயிலர் 2 வரை பல படங்களிலும் நடித்து விட்டார். ரஜினி சினிமாவில் 50 வருட அனுபவத்தை தாண்டியிருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த நடிகராக ரஜினி இப்போதும் இருக்கிறார். 74 வயதிலும் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ரஜினிக்கு மது,சிகரெட் ஆகிய இரண்டு கெட்டப் பழக்கங்களும் இருந்தது. இதை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
2011ம் வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா என்கிற படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி மயங்கி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து அவரை சிங்கப்பூருக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என வெளியே சொல்லப்படவில்லை என்றாலும் அவரது இரண்டு சிறுநீரகங்கலும் புழுதடைந்துவிட்டதாகவும், அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியானது.
அதன்பின் ரஜினி உடல் நிலை சீராகி தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். மேலும், அந்த சம்பவத்திற்கு பின் அசைவ உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற துவங்கினார். மது, சிகரெட் இரண்டு கெட்டப் பழக்கங்களையும் கைவிட்டார்.

இந்நிலையில் ரஜினியின் மனைவி லதாவின் சகோதரரும், இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவுமான நடிகர் ரவி ராகவேந்திரா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ரஜினிக்கு உடல்நிலை பிரச்சனையாகி அவர் பிழைப்பாரா மாட்டாரா என்கிற நிலை வந்தது. ஆனாலும் அவருக்குள் இருந்த உத்வேகம், கடவுள் அருள், ரசிகர்களின் பிரார்த்தனை எல்லாம் சேர்ந்து அவரை பிழைக்க வைத்தது’ என சொல்லியிருக்கிறார்.
