விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மனிதாபிமானம், மற்றவர்களுக்கு அவர் செய்த உதவிகள், அவரின் எளிமையான குணம் ஆகியவைதான். அதன் பின்னர்தான் அவர் நடிகர். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு அவர் பலருக்கும் உதவி செய்திருக்கிறார். பசியோடு இருந்த பலருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய விஜயகாந்த் ‘நான் அப்போது பிரபலமாகவில்லை. அறிமுக நடிகனாக சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு படத்தில் நடித்தபோது கதாநாயகி வருவதற்கு தாமதமானதால் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென கதாநாயகி வந்துவிட்டார்.
உடனே ஓடி வந்து ‘ஹீரோயின் வந்துட்டாங்க. உடனே ஷாட் வைக்கணும் வா’ என சொல்லி அப்படியே இழுத்துக்கொண்டு போய் விட்டார்கள். பசியோடு போய் நடித்தேன். அதுதான் என்னை யோசிக்க வைத்தது.. நாம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்போது எல்லோருக்கும் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்று நினைத்தேன் என்று பேசியிருந்தார்.

அவர் உயிரோடு இருக்கும் வரை அதை செய்தும் காட்டினார். அவரின் அலுவலகத்தில் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் சாப்பாடு கிடைக்கும். சினிமாவில் கஷ்டப்பட்ட பலரும் அங்கு சென்று உணவருந்தி பசியை தீர்த்துக் கொண்டார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் சண்டை இயக்குனராக பணிபுரிந்த ஜாக்குவார் தங்கம் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை கூறினார்.
1978ல் நான் கேப்டனை சந்தித்தேன். அப்பவே அவர் ஆபிசில் நிறைய பேர் வந்து சாப்பிடுவாங்க.. எல்லாமே கஷ்டப்படுறவங்க.. ‘எதுக்குணே தினமும் சாப்பாடு போடுகிறீர்கள்?’ என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘மிருகம் எடுத்து வாழும்.. மனுஷன் மட்டும்தான் கொடுத்து வாழ முடியும்.. நாம மனுசனா இருக்கும்ல.. கொடுத்து வாழுவோம்’ என சொன்னார்.
அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. ‘புரட்சித்தலைவர்தான் இப்படி பண்ணுவார்’ என்று சொன்னேன். அதற்கு ‘ அவரை மாதிரி வந்தா நானும் நல்லா பண்ணுவேன்’ என்று கேப்டன் சொன்னார். அப்படி வந்து அதை செய்தும் காண்பித்தார்’ என பேசியிருக்கிறார்.
