வழக்கமாக விஜய் நடிக்கும் புதிய படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். சினிமா பிரபலங்கள், படத்தின் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள். விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்ப்பதற்கு பலரும் முயற்சி செய்வார்கள்.
விஜயின் ரசிகர் மன்றம் சார்பாகவும் பல டிக்கெட்டுகள் பலருக்கும் கொடுக்கப்படும். இப்படி பல்லாயிரம் பேர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். மேலும் அந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்படும்.. அதேபோல் அவர் பேசுவதும் பேசுபொருளாக மாறும்.
அந்த விழாவில் விஜய் பேசியது தொடர்பான வீடியோக்கள் ட்விட்டர், முகநூல் போன்ற சமூகவலைத்தளங்கலில் வைரலாகும். விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள். தற்போது விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் அரங்கில் நடைபெறவிருக்கிறது. விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் மலேசியா அரசும் இந்த விழா தொடர்பாக பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இல்லை, ஒருமுறை மைதானத்திலிருந்து வெளியே சென்று விட்டால் மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது.. உணவுப்பொருட்கள், மது, கேமரா, ட்ரோன் கேமரா உள்ளிட்டவைகளுக்கு அனுமதி இல்லை. அரசியல் தொடர்புடைய எந்த பொருளுக்கும் மைதானத்தில் உள்ளே அனுமதி கிடையாது. விஜயின் தவெக கட்சி தொடர்பான டீ ஷர்ட், கொடி, பேட்ஜ், போஸ்டர், குடை, பேனர் என எந்த பொருளையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது என மலேசியா காவல்துறை கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
அதேபோல் இந்த விழாவில் விஜய் உள்ளிட்ட யாரும் அரசியல் பேசக்கூடாது. இது ஒரு முழுக்க முழுக்க ஒரு சினிமா விழாவாக மட்டுமே நடக்க வேண்டும்’ என மலேசியா காவல்துறை கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
