நடிகர் ரஜினியை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என கொண்டாடினாலும், இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் ஆனால் அவர் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. அதற்கு காரணம் அவரின் ஆன்மிகம். 80களின் பாதியிலேயே ரஜினி ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டார். அதன்பின் இமயமலைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டது.
அங்கு பாபா குகையில் தியானம் செய்வது இவரின் பழக்கம். அதேபோல் ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர் என்பது அவருடன் பழகிய எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் மறைந்த ஏவிஎம் சரவணன் சில வருடங்களுக்கு முன்பு ரஜினி பற்றி பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர் அவரைப்போல ஒருவரை பார்க்க முடியாது. முரட்டுக்காளை படத்தை நாங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது கோயமுத்தூரில் ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்தோம். அங்கு ஜெய்சங்கர் வந்தபோது ரசிகர்கள் கூடி விட்டார்கள். இவருக்கே இப்படி என்றால் ரஜினி வந்தால் என்னாவது என எங்களுக்கு பதட்டமாகிவிட்டது. ஆனால் எங்களுக்கு முன்னரே ரஜினி ரயிலில் போய் உட்கார்ந்து விட்டார்.

யாருக்கும் அடையாளம் தெரியாதபடி தலையில் ஒரு தலைப்பாகை கட்டி ரயிலில் ஏறிவிட்டதாக என்னிடம் சொன்னார். அதேபோல், அவருக்கு ஸ்டார் ஹோட்டலில் சூட் ரூம் போட்டு கொடுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த ரஜினி ‘எனக்கு எதற்கு சூட் ரூம்?.. எனக்கு தேவை ஒரு சின்ன ரூம்’ என்று சொல்லி அந்த ரூமை கேன்சல் பண்ணிவிட்டு ஒரு சாதாரண ரூமில்தான் தங்கினார்.
அதேபோல் எங்கள் தயாரிப்பில் சிவாஜி படத்தில் நடித்த போது எங்கள் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தது. அவருக்காக ஒரு கேரவேன் ஏற்பாடு செய்திருந்தோம். அதைப்பார்த்து கோபப்பட்ட ரஜினி ‘அவுட்டோர் ஷூட்டிங் என்றால் ஓகே.. இங்கே செட்டுக்குள் ஷூட்டிங் நடக்கும்போது எதற்காக எனக்கு கேரவன்?.. நான் 30 வருடங்களாக ஏவிஎம்மில் நடித்து வருகிறேன்.. கேரவன் வேண்டாம்.. வெளியே எடுத்தால்தான் நடிப்பேன்’ என சொல்லிவிட்டார். அப்படிப்பட்ட எளிமையானவர்தான் ரஜினி’ என்று பேசியிருக்கிறார் சரவணன்.
