சினிமா நடிகர்கள் பொதுவாகவே வேறு உலகத்தில் வசிப்பார்கள். அவர்களின் உலகம் ஆடம்பரமானது. வசதியானது.. அவர்களின் கால்கள் வானத்தில் இருக்கும்.. தரையில் நடக்கவே மாட்டார்கள்.. காரில் சென்றால் கூட யாரும் பார்க்க கூடாது என்பதற்காக கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி தங்களை மறைத்துக் கொள்வார்கள். எல்லா சினிமா விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் தாங்கள் நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்கே வராத நடிகர்கள் இங்கே இருக்கிறார்கள்.
சில நடிகர்கள் ‘என்னை வாழ வைத்த மக்களுக்கு நான் ஏதாவது செய்வேன்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள்.. களத்தில் இறங்கிவர மாட்டார்கள். இதை தமிழ் சினிமா ரசிகர்கள் நிறைய பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் நடிகர் விஜய் நேற்று ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

என் 33 வருட சினிமா வாழ்க்கையில் எனக்கு ஆதரவாக நின்றவர்கள் ரசிகர்கள். எனவே அடுத்த 33 வருடங்கள் அவர்களுக்கு ஆதரவாக நான் நிற்பேன். எனக்கு ஒன்னுனா தியேட்டர்ல போய் நின்னாங்க. இனிமே அவங்களுக்கு ஒன்னுன்னா நான் அவங்க வீட்ல போய் நிப்பேன். எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக இந்த சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றின்னு சொல்லிட்டு போறவன் இல்ல.. நன்றிக்கடனை தீர்த்து விட்டுதான் போவேன்’ என்று அனல் பறக்க பேசியிருக்கிறார்.
அதாவது தன்னை சினிமாவில் வாழ வைத்த ரசிகர்களுக்கு அரசியல் மூலம் வந்து நல்லது செய்வேன் என்பதைத்தான் விஜய் இப்படி சொல்லியிருக்கிறார். இந்த செய்தியை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விஜய் ரஜினியைத்தான் மறைமுகமாக பேசியிருக்கிறார் என கிளப்பி விட்டுள்ளனர். ஏனெனில் ரஜினி ‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்கள்’ என மேடைகளில் பேசுவார்.

திரைப்படங்களில் தமிழ்நாட்டு மக்களுக்காக எதுவும் செய்வேன் என்று பாட்டெல்லாம் பாடுவார். ஆனால் நிஜத்தில் அப்படி அவர் எதுவும் செய்யவில்லை.. அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் அவருக்கு இருந்தாலும் சில காரணங்களால் அதிலிருந்து விலகினார். எனவே, அதைத்தான் விஜய் பேசியிருக்கிறார் என சிலர் சொல்கிறார்கள். சிலரோ விஜய் பொதுவாகத்தான் பேசியிருக்கிறார். அவர் ரஜினியை நினைத்து பேசினாரோ இல்லையோ ஆனால் இது ரஜினிக்கும் பொருந்தும்’ என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
