வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பே பேச்சு வார்த்தையெல்லாம் நடந்தது. துவக்கத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் கோட் படத்தின் ரிசல்ட்டை பார்த்து விட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க தயங்கினார் சிவகார்த்திகேயன். எனவே பல மாதங்கள் வெங்கட் பிரபுவை காத்திருக்க வைத்தார். அதனால், கோட் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.
இடையில் மதராசி, பராசக்தி ஆகிய படங்களை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு சிவகார்த்திகேயன் தயாரான போது வெங்கட்பிரபு தொடர்ந்து பேசி வந்தார். ஒருபக்கம், டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்தார் சிவகார்த்திகேயன்.

ஒரு பக்கம் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நச்சரித்து வந்தார். ஒருவழியாக அவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார் சிவகார்த்திகேயன். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை எனவும், இப்படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் மேல் எனவும் செய்திகள் வெளியானது. கோட் படத்திற்காக விஜயை அமெரிக்கா கூட்டி சென்றது போலவே சிவகார்த்திகேயனையும் அமெரிக்காவுக்கு அழைத்துக்கொண்டு போனார் வெங்கட் பிரபு.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை வெங்கட்பிரபு தொடர்பு கொண்டாராம். தனது கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் விஜய் ஆண்டனி அதிக சம்பளம் கேட்டதால் அவர் நடிக்கவில்லை என்கிறார்கள். எனவே, வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம் வெங்கட் பிரபு.
