இந்திய சினிமா உலகினரால் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுபவர் ரஜினி. நடிக்க வந்து 50 ஆண்டுகளை கடந்து விட்டார். 74 வயதாகியும் இன்னும் ஆக்டிவாக ஹீரோவாக நடித்து வருகிறார். குறைந்தபட்சம் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பின் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருந்தார் ரஜினி. ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறிவிட வேறு இயக்குனரை தேடினார்கள். இறுதியில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெயர் அடிபட்டது. ஆனால் இப்போது வரை அது உறுதி செய்யப்படவில்லை.
ரஜினிகாந்த் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்கவிருக்கிறார். ஒன்று அவர் ஹீரோவாக நடிக்கும் படம், இன்னொரு படத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த இரண்டு படங்கள் போக உதயநிதியின் ரெட்ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.

விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ள ஹெச்.வினோத் மற்றும் சியான் விக்ராமை வைத்து வீர தீர சூரன் படத்தை இயக்கிய அருண்குமார் என இரண்டு பேரிடமும் கதை கேட்டு ஓகே செய்திருக்கிறார்கள். இரண்டு பேரில் யாருடைய கதை ரஜினிக்கு பிடிக்கிறதோ அவரே ரஜினி படத்தை இயக்குவார் எனத்தெரிகிறது.
ஒருவேளை ரஜினி ஹெச்.வினோத் கதையை டிக் அடித்தாலும் அது நடப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகிவிடும். ஏனெனில் அடுத்து ஹெச் வினோத் இரண்டு படங்களை இயக்குகிறார். ஒன்றில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மற்றொன்றில் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டுதான் அவர் ரஜினி படத்தை இயக்குவார் என்கிறார்கள்.
