
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசூரன், ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவரின் இயக்கத்டிஹ்ல் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ள திரௌபதி 2 திரைப்படம் நேற்று வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு பெரிய ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. படம் ஓடும் தியேட்டர்கள் காலியாக இருக்கிறது. இந்நிலையில்தான் மக்களிடம் கோரிக்கை வைத்து மோகன் ஜி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் மண்ணில் ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றை திரௌபதி 2 திரைப்படமாக எடுத்திருக்கிறோம். பலரை எதிர்த்து நம் கோவில்களையும், நம் இந்து தர்மத்தையும் மீட்டு கொடுத்த ஒருவரின் கதை. இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டோம். மக்களும் இந்த படம் பொங்கலுக்கு வருகிறது என நினைத்தார்கள். ஆனால், பராசக்தி, வா வாத்தியார் போன்ற படங்கள் வந்ததால் படத்தை வெளியிட முடியவில்லை.
எனவேதான் இந்த படம் நேற்று வெளியானது. ஆனால் இந்த படம் வெளிவந்தது பலருக்கும் தெரியவில்லை. மக்களிடம் இந்த படம் போய் சேரவில்லை. என்னுடைய படங்களுக்கு கடலூர், தர்மபுரி, விழுப்பும், சேலம், ஆத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் வரவேற்பு இருக்கும். ஆனால், அங்கும் கூட மக்கள் வரவில்லை. ஒரு பக்கம் அஜித் சாரின் மங்காத்தா திரைப்படம் இந்த தேதியில் ரிலீஸாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. அந்த படம் வெளியானதால் திரௌபதி 2-க்கு நிறைய தியேட்டர்களும் கிடைக்கவில்லை.
தயவு செய்து படம் பார்த்தவர்கள் மக்களிடம் போய் சொல்லுங்கள்.. சமூக வலைதளங்களில் உங்கள் கருத்தை சொல்லி வீடியோ போடுங்கள். மிகவும் கஷ்டப்பட்டு இரண்டு வருடங்கள் உயிரையும் உழைப்பையும் போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
சிலர் வேண்டுமென்றே என்மீது தவறான தகவல்களை சொல்லி திரௌபதி 2-க்கு எதிராக விமர்சனம் செய்கிறார்கள். நான் ஏதோ RSS-யிடம் 500 கோடி பணம் வாங்கி இந்த படத்தை எடுத்ததாக சொல்கிறார்கள். 500 கோடி பணம் வாங்கினால் நான் ஏன் இப்படி வந்து நிற்கப்போகிறேன். என்னை ஒழிப்பதற்காக ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது.. அவர்களை மக்கள் நம்ப வேண்டாம்.
எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.. நான் மக்களையே நம்பியிருக்கிறேன். திரையுலகில் எனக்கு எந்த ஆதரவும் இல்லை. யாரையும் நான் குறை சொல்லவும் விரும்பவில்லை.. எனவே படத்தை பார்க்காதவர்கள் தியேட்டரில் போய் படம் பாருங்கள்.. பார்த்தவர்கள் மற்றவரிடம் சொல்லுங்கள்.. இந்த படம் பற்றி இதுதான் என்னுடைய கடைசி வீடியோ’ என்று பீலிங்காக பேசியிருக்கிறார்.